முதல் பக்கம் » பெண்கள் » டிப்ஸ் » குடும்பத்துடன் விடுமுறையை செலவிடுவது...

Holiday with Family

-

குடும்பத்துடன் விடுமுறையை செலவிடுவது...

டிப்ஸ்:குடும்பத்துடன் விடுமுறையை செலவிடுவது...

கூடல்.காம் - Tuesday, November 06, 2007
Holiday with Family - Tips for Women

சில குடும்பங்களில் அனைத்து உறுப்பினர்களும் தினமும் வெளியில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டாலும், இரவு நேரங்களில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்ணும் பழக்கத்தைப் பின்பற்றுவர். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இது சாத்தியமில்லை. ஏனெனில், குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் சீக்கிரமே பசிக்கும். அவர்கள் உணவு உண்டு உறங்கிய பிறகே, தந்தை அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவார்.

இது போன்ற குடும்பங்களில் விடுமுறை நாட்களை குடும்பத்துடன் கொண்டாட முடிவு செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில், குழந்தைகள் வளர்ப்பில் தேவையில்லாத பிரச்னை, மனைவி & கணவன் உறவில் சிக்கல், எதையும் மனம் விட்டுப் பேச நேரமே கிடைக்காமல் அவதி, இதன் தொடர்ச்சியாக ஏற்படும் உடல் உபாதை ஆகியவை உண்டாகும்.

நகர்ப்புற குடும்பங்களில் சிலர் இப்போது வீட்டையே புதிய சூழ்நிலையாக உருவாக்கி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து நாள் முழுதும் அளவளாவி, ஒன்றாக சாப்பிட்டு பொழுதைச் செலவிடவென ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து கொண்டாடி மகிழ்கின்றனர். மாதம் ஒரு நாள் என்ற சுதியில் இவர்கள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். கிராமப் புறங்களில், கோவில் பூசாரி வீடு முதல், கழனியில் வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் கிட்டத்தட்ட இதே பிரச்னை தான் ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் ஏற்கனவே இயற்கைச் சூழலில் தங்கள் வீட்டை அமைத்துக் கொண்டுள்ளதால், நகர்ப்புற "டென்ஷன்" கிடையாது. மேலும், அளவோடு சாப்பாடு, உடல் உழைப்பு என்று அவர்கள் பொழுது கழிவதால், நகர்ப்புறப் பிரச்னைகள் கிடையாது. திருவிழாக்களில் உறவினர்கள் ஒன்று கூடுகின்றனர். நகர்ப்புற மக்களை விட, திட்டமிட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். மகளிர் சுய உதவிக் குழுவும் பெண்களுக்கு உதவுவதால், அவர்களின் வாழ்க்கைத் தரமும் மெல்ல உயர்ந்து வருகிறது.

நகர்ப்புற மக்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதே தவிர, மன வளம் மிகவும் குன்றிவிட்டது. இதற்காகவே இந்த குடும்ப விழாவைக் கொண்டாடினால், ஓரளவு "டென்ஷனை" குறைக்கலாம்.

இதன் பயன் என்ன?

வாரத்திற்கு ஒரு முறை இப்படி அமைத்துக் கொண்டால், வயது வந்த மகளோ, மகனோ வெளியில் சுற்றித் திரிவது தவிர்க்கப்படும். இதற்கென கொலம்பியா பல்கலைக் கழகம் ஒரு ஆராய்ச்சியே நடத்தியுள்ளது. குடும்ப விழாவின்போது, மகன், மகள் அனைவரும் நாள் முழுவதும் வீட்டிலேயே உணவு அருந்துவதால், அன்றைய தினம் சிகரெட் புகைப்பதோ, மது குடிப்பதோ குறைகிறது என்று சொல்கிறது. மேலும், பெற்றோர் & குழந்தைகளிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கிறது என்று சொல்கிறது. குடும்ப வாழ்க்கைக்கு இது தானே மிகவும் அவசியம்.

குழந்தைகளுக்கு பரிசுப் பொருள் கொடுங்கள்

இந்த வாரம் எந்த "சப்ஜெக்டில்" யார் அதிகம் மார்க் வாங்கியிருக்கின்றனர் என்பதற்கு ஒரு போட்டி என்று அறிவித்து, அதிக மதிப்பெண் வாங்கிய குழந்தைக்கு பரிசு கொடுக்கலாம். பரிசு வாங்காத குழந்தை மனம் வருந்தினால், "அடுத்த வாரம் உனக்கு தான்; நிறைய மார்க் எடு.." என்று உற்சாகப்படுத்துங்கள்.

இந்தப் போட்டி ஆரோக்கியமானதாக அமைந்து குழந்தைகள் படிப்பில் ஆர்வம் செலுத்தத் துவங்கி விடும்.

"டிவி" வேண்டாமே!

அன்றைய தினம் "டிவி"யின் மின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள். குழந்தைகளோடு விளையாடுவது, நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொள்வது, குழந்தைகள் சொல்லும் விஷயங்களை ஆர்வத்தோடு கேட்டறிவது என்று செலவிடுங்கள். இடைவெளி கிடைக்கும் சில சில நிமிடங்களில் கணவன் & மனைவி மனம் விட்டுப் பேசவும் செய்யலாம்.

நீங்களே சமைத்து விடுங்கள்

உங்கள் கணவரை உதவிக்கு அழைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும், "தினமும் நீங்கள் செய்ய வேண்டிய வேலை இது" என்று பிரித்துக் கொடுங்கள். இந்த வேலைகளைத் திறம்படச் செய்வோருக்குப் பரிசும் கொடுக்கலாம். செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது யார், தினமும் இரவு படுக்கை போடுவது யார், காலையில் மடித்து வைப்பது யார் என்று சிறு சிறு வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தால், தினசரி வேலைகளும் உங்களுக்குச் சுலபமாக நடக்கும்.

இது போன்று நிறைய வசதிகள் இந்த குடும்ப விழாவில் ஏற்படுத்திக் கொள்ளலாம். முயன்று பாருங்கள்!

டிப்ஸ்

Site Meter