முன் எச்சரிக்கையுடன் இருந்தால் கோடையையும் கொண்டாடலாம்!
இது கோடை காலம். வாட்டி வதைக்கும் இந்த வெயில் காலத்தில் நாம் எந்தெந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
கோடை காலத்தில் முக்கியப் பிரச்சினையாக இருப்பது சுற்றுப்புற சூழலில் வெப்பம் அதிகரிப்பது தான். இந்த வெப்ப அதிகரிப்புதான் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. உடலின் இயல்பான வெப்ப நிலை கோடையில் பல்வேறு காரணங்களால் அதிகரிக்கின்றன. அதனால் நம் உடல் அதைத் தாங்காததால் களைப்பு, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, சுய நினைவிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. நம் மூளை வெப்ப நிலைக்கு தாக்குப் பிடிக்கவில்லை என்றால் மூளைக் குழப்பம், தடுமாற்றம், உளறல், மன ரீதியான மாற்றங்கள் வந்து விடுகிறது. சிறுநீரகப் பிரச்சினை, சர்க்கரை நோய், உயர்குருதி அழுத்தம், முதுமை போன்ற பிரச்சினை உள்ளவர்களின் பாடு படு திண்டாட்டம் தான். அதாவது இந்தப் பிரச்சினைகள் கோடைக்கு கொண்டாட்டம் என்று சொல்லாம்.
வெப்பத்தால் உடல் நீர் ஆவியாகிவிடுவதால் உடல் வெப்பநிலை உயர்கிறது. இதனால் உடலில் நீரின் அளவு குறைந்து "நீர்ச்சத்துக் குறைவு" என்கிற தொல்லை ஏற்படுகிறது. இதனால் வியர்வையை உண்டாக்குகிறது உடல். சிறுநீர் கழிக்கின்ற அளவும் குறைகிறது. உடம்பில் ஏற்படும் தண்ணீர் குறைவை "தாகம்" என்பதன் மூலம் உணர்த்தப்பட்டு, நாம் நிறைய தண்ணீரை குடிக்கும் போது பொதுவான உடல் வெப்பநிலை, நீரின் அளவு சமநிலைக்கு வராமல் போனால் வாய் உலர்ந்து, உடல் சோர்ந்து, தலை வலித்து, சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறும். இதற்காக பதற்றமடைய வேண்டாம். இந்த நிலை ஏற்படும்போது சிறிது சர்க்கரை, உப்பு கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது. கோடையில் இரு மடங்கு தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமாகும்.
வயிற்றுப் போக்கு காய்ச்சல் உள்ளவர்கள் சர்க்கரை, உப்பு நீர் கரைசல், பழச்சாறு, இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை குடிப்பது நல்லது. கோடையில் அலைபவர்கள், தொழில் ரீதியாக கட்டாயமாக சூரிய ஒளியில் இருக்க வேண்டியவர்கள், நிறைய உடற்பயிற்சி செய்பவர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை அடிக்கடி குடிப்பது நல்லது. வெகுநேரம் வெயிலில் நின்று வேலை செய்பவர்கள் வெப்பத்தால் உணர்விழந்து திடீர் மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலைமைக்கு ஆளாவதுண்டு! இப்படிப்பட்டவர்களை உடனடியாக, முகம் வானத்தை பார்க்கிற மாதிரி நிழலான தரையில் படுக்க வைக்க வேண்டும். இது உயிரைக் காப்பாற்றும். சிலர் போதிய அளவு நீர்ச்சத்து உட்கொண்டாலும் அதில் உப்புச்சத்து குறைவாக இருந்தால் கடும் வேலையைச் செய்துவிட்டு வெயிலிலிருந்து நிழலுக்காக வந்து ஓய்வெடுக்கும்போது "சதைப் பிடிப்பு" ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் இதனை சரி செய்ய உடலில் குளிர்ந்த நீரை ஊற்றுவார்கள். இது தவறு. அப்படி செய்யும்போது சதைப் பிடிப்பு அதிகமாகுமே தவிர குறையாது. நீர் கரைசலை குடித்த பிறகும் அது சரியாகவில்லை என்றால் உப்புநீர் கரைசலை நரம்பு வழியாக ஏற்றி சரி செய்வது தான் சிறந்த வழியாகும்.
அடுத்ததாக வெப்ப களைப்பு என்பது உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், குமட்டல், தலைவலி ஆகியவை ஏற்படுகின்ற ஒரு நிலை. இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நோயாளரை காற்றோட்டமான குளிர்ந்த இடத்திற்குக் கூட்டிச் சென்று அவரை தலை சற்று கீழே உள்ளவாறு படுக்க வைத்து உப்புநீர் கரைசலைக் கொடுத்தால் அவர் உடனே இயல்பு நிலைக்கு திரும்புவார். கோடை காலத்தில் நீர்ச்சத்து அதிகமுள்ள தர்பூசணி, கிருணி பழம், வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், பச்சைக் காய்கறிகள், இளநீர், மோர், தயிர், நுங்கு, பதநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கோடையின் மிக முக்கிய பிரச்சினையான வெப்பத்தாக்கு முதியவர்கள், குழந்தைகள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், தலை வழுக்கை உள்ளவர்களுக்கு காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் வர அதிக வாய்ப்புள்ளது. இப்படிப்பட்டவர்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களால் வெளியில் செல்லும்போது குளிர் தரும் மூக்கு கண்ணாடிகளை அணியலாம். அதே நேரத்தில் எளிய பருத்தி ஆடைகளை அணிவதன் மூலமும், இடையிடையே நிழலில் ஓய்வெடுப்பதன் மூலமும் வெப்பத்தாக்கை விரட்டலாம்.
கோடை காலத்தில் தண்ணீர் விஷயத்தில் செய்யும் கவனக் குறைவால் பல தொற்றுநோய்கள் வரலாம். காலரா, டைஃபாய்டு, வயிற்றுக் கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்றவை இதில் பொதுவானவை. வீட்டில் தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து தூய்மையான துணியில் வடிகட்டி குடிப்பது பாதுகாப்பானது. வெளியில் கிடைக்கும் தண்ணீர், குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. வெயில் காலத்தில் பாதுகாப்பான நீர் எது? என்றால் அது இளநீர் தான். நாம் வெளியில் போகும்போது வீட்டிலிருந்து சுத்தமான தண்ணீரை எடுத்து செல்வது உகந்ததாகும். பெரிய தொட்டி, கிணறு ஆகியவற்றில் உள்ள தண்ணீரை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கோடையில் குளியல் என்றால் குளிர்ந்த, சுத்தமான நீரில் காலை, மாலை இரண்டு வேளை உடம்பின் கழிவுகள் போக, தேய்த்து குளிப்பது நல்லது. வெயில் காலத்தில் பருத்தி ஆடை அணிவதுதான் பாதுகாப்பானது. அணியும் உள்ளாடைகளும் பருத்தி ஆடைகளாக இருப்பது நல்லது. வெயிலில் செல்லும் போது ஒருபோதும் கருப்பு நிறக் குடையை பயன்படுத்தாதீர்கள். காரணம் கருப்பு நிறம் வெப்பத்தை உள்ளிழுக்கும் சக்தி கொண்டது. அது உள்ளிழுத்த வெப்பத்தை நமக்கு அனலாகக் கொடுக்கும். அதனால் வெள்ளை நிற குடைகளை பயன்படுத்துங்கள். நீண்ட நேரம் வெயிலில் விளையாடும் மட்டைப் பந்து வீரர்கள் வெள்ளை நிற உடைகளை அணிவது தங்களை வெயிலின் வெப்பத்திலிருந்து பாதுகாக்கத்தான்.
அதுபோன்று கோடை காலத்தில் களிம்பு, முகப்பூச்சு ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். சுளிம்பும், முகப்பூச்சுக்களும் தோலை சுவாசிக்க விடாமல், தோல் சுருக்கத்திற்கு வழி வகுக்கிறது. அத்துடன் முகத்தில் கிருமிகள் தொற்றவும், பருக்கள் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. சில நறுமணத் திரவங்களும், துர்நாற்றத்தை தவிர்க்கக் கூடிய சில வாசனை திரவியங்களும் தோலில் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் கோடை காலத்தில் இவைகளைத் தவிர்ப்பது நல்லதாகும்.
வெயில் காலத்தில் அடிக்கடி கண்களை மூடி முகம் கழுவுவது நல்ல பலனைத் தரும். கண்களைத் திறந்து முகம் கழுவினால் கண்விழித்திரை, வெண்படல பாதிப்பு வரும். குளில் அறையில் இருந்து வெளியே வருபவர்கள், வெயிலில் இருந்து உள்ளே செல்பவர்கள் உடல் வெப்பநிலையை சீராக்கிய பின் வேலைகளைப் பார்க்கலாம். கொதிக்கும் வெயிலில் இருந்து வந்து குளிர்ந்த நீரில் தலை குளித்தால் அது ரத்தக் குழாய்களை சுருங்க செய்து, ரத்த ஓட்டம் தடைப்பட காரணமாக அமையும். அதனால் இது தவிர்க்கப்பட வேண்டியது. ஒரு நாளைக்கு நான்கு முறையாவது விரல் இடுக்குகளை கழுவுவது பூஞ்சைத் தொற்றைத் தடுக்கும். அது மாதிரி கோடை காலத்தில் உணவு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். வெயில் காலத்தில் கோதுமை உணவு வகைகளைத் தவிருங்கள். இது சூடானது. இதே போல தேநீர், மது வகைளை தவிர்ப்பதும் நல்லது. குடிக்கும் தண்ணீரில் வெட்டிவேரை கட்டிப் போட்டு வைக்கலாம். சிறிது கருப்பட்டி, ஒரு துண்டு புளி இவைகளை நீரில் கலந்து இன்றைக்கும் கிராமத்தில் "பானகரம்" என்ற பானத்தை தயாரித்து குடித்து வருகிறார்கள். இது நீர் சத்தைக் கொடுப்பதோடு நீர்க்கடுப்பையும் குறைக்கும். வீடுகளில் பகலில் வெப்பத்தை தடுக்க கீற்று தட்டிகளை உபயோகப்படுத்தலாம். அத்துடன் கொஞ்சம் வெட்டிவேரையும் கட்டி வைத்தால் அது குளிர்ச்சியைத் தரும்.
மேற்குறிப்பிட்ட முறைகளை பின்பற்றினால் கோடையையும் கொண்டாடலாம்!
பொதுவானவை + டிப்ஸ்
- வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!
- பயனுள்ள அட்டகாசமான வீட்டுக்குறிப்புகள்
- ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள்!
- பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
- வீடு மாற போறீங்களா?
- பருவப் பெண்களின் தாய்மார்களுக்கு....
- காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட....
- தூக்கத்திற்கான ''தலையணை'' மந்திரம்...
- எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?
- கோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்!






