தூக்கத்திற்கான ''தலையணை'' மந்திரம்...

கூடல் - 20 May, 2010
Pillows chant to sleep...! - Child Care Tips and Informations in Tamil

எல்லாமே இயந்திர உலகமாகிப் போன இன்றைய உலகில், தூக்கத்தின் தாக்கமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், மனதில் அமைதி இல்லாமல், கடுமையான உழைப்பும் இல்லாமல் தூக்கமின்றி தவிக்கின்றான் மனிதன்.

பழங்காலத்தில் கடுமையான உழைப்பு இருந்தது. எதையும் ஆழ்ந்து ரசிக்கும் மனதும் இருந்தது. மனதில் எப்போதும் சந்தோஷம் இருந்ததால் அவனுக்கு படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவியது. ஆனால் இன்றைக்கு தொழில், வேலை போட்டிகள், பொறாமை பெருகி விட்டதால் மனதில் அமைதியும் கெட்டுப் போனது.

தூக்கமும் குறைந்து மருந்து, மாத்திரை, போதை என்று பெருகிப்போனது. மனசும், ஆரோக்கியமும் சீராக இருந்தால் மட்டுமே படுத்தவுடன் தூக்கம் வருகிறது.

தூக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதும் சுகமான தலையணைகள்தான். தூக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகளிலும் முக்கிய இடம் பிடிப்பது தலையணைகள்தான். இதனால் தலையணைகளுக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் விதவிதமான தலையணைகள் உருவாகி வருகின்றன.

பழங்காலத்தில் துணிகளை சுருட்டி வைத்து தலையணையை உருவாக்கினார்கள். அப்புறம் பஞ்சினால் தலையணை உருவானது. பின்னர் தேங்காய் நார் மூலம் தயாரிக்கப்பட்டது. இப்போது பாரம்பரிய பழக்க முறை மாறி சிந்தெட்டிக் தலையணைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தலையை தூக்கி வைப்பது மட்டுமின்றி, குளிர்ச்சி ஏற்படுத்துவதற்கும் தலையணை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சிலரோ, தலையணைகளை விஞ்ஞான முறையில் ஆராய்ச்சி செய்து உருவாக்குவதாகவும் கூறுகின்றனர்.

பழங்காலத்தில் பயன்படுத்திய தலையணைகளில் அழுக்கு ஏற்பட்டால் திரும்பவும் சுத்தம் செய்து துவைத்து பயன்படுத்த முடியாது. இதனால் ஒரே தலையணையை ரொம்ப நாட்களுக்கு பயன்படுத்துவதால் ஏகப்பட்ட தொற்றுநோய்களும் உருவாகின.

தற்போது தலையணைகளும் செயற்கை முறையில் சிந்தெட்டிக் தலையணைகளாக உருவாக்கப்படுவதால் துவைப்பதும் எளிது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கும் வாய்ப்பும் குறைவு.

இதில் பஞ்சினால் தயாரிக்கப்பட்ட தலையணைகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தினால் அவை கெட்டியாகிவிடும். இதனால் சில தொற்றுக் கிருமிகளும் உருவாகி, அலர்ஜியை உருவாக்கும். இவையெல்லாம் இல்லாத தலையணைகளும் தற்போது விற்கப்படுகின்றன.

சரியான உயரத்தில் தலையணையை வைக்காவிட்டால் முதுகு வலி, கழுத்து வலி, தூக்கமின்மை ஆகியவை உருவாகும். தலையணையை சரியாக வைக்கும் முறை எப்படி என்றால், நம்முடைய கழுத்து, தலை மற்றும் தோள் ஆகிய மூன்று பகுதிகளும் தலையணையில் சமமாக இருக்க வேண்டும்.

இப்படி வைத்து தூங்கினால் தூக்கமும் சீராகும். ஓட்டல்களில் உள்ள தலையணைகள் சரியான அளவுகளில் வைக்கப்படுகின்றன. கழுத்து வலி உள்ளவர்களுக்கு புதுவிதமான தலையணைகள் உருவாக்கப்படுகின்றன.

தூங்குவதற்கு மட்டுமின்றி, கீழே போட்டு உட்காரவும், சாய்ந்து கொள்ள முதுகுக்கு வைக்கவும் என வகைவகையான தலையணைகள் தயாரிக்கப்படுகின்றன.

எதுவாக இருந்தாலும் தலையணை பொருத்தமாக இருந்தால் தூக்கத்திற்கு கவலை இல்லை. அதுமட்டுமின்றி தலையணை அழகாக, கலராக இருந்தால் பார்க்க ஒரு கவர்ச்சியாகவும் இருக்கும்!

நிம்மதியாக தூங்க:

* இரவு தூங்குவதற்கு முன்பு, அதாவது இரண்டு மணி நேரத்திற்குள் டீ, காபி குடிக்க வேண்டாம்.

* இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும்.

* சிலர் தூங்குவதற்கு முன்பாக, அன்றைக்கு நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்தும் டென்ஷனாகிக் கொண்டிருப்பார்கள். கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.

* தூங்குவதற்கு முன்பாக மகிழ்ச்சியான விஷயங்களை நினைத்துக் கொள்ளவும்.

* ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் கடவுளை நினைத்துக் கொள்ளலாம். அன்றைய பொழுது இனிமையாக சென்றதற்கு கடவுளுக்கு நன்றி கூறலாம்.

* படுக்கை அறையில் அதிகமான வெப்பமோ அல்லது அதிகமான குளிரோ இல்லாமல், மிதமான தட்பவெப்பம் இருப்பது நல்லது.

* சிந்தனையைத் தூண்டாத, மகிழ்ச்சி தரும் புத்தகத்தை வாசிக்கலாம்.

* படுக்கை அறையை கும்மிருட்டாக வைத்திருக்காமல், இதமான வெளிச்சம் பரவுமாறு இருந்தால் தூக்கம் வரும்.

* தூங்கச் செல்வதற்கு முன்பாக, உடலை வருத்தி உடற்பயிற்சி, ஆசனம் என்று எதுவும் செய்ய வேண்டாம்.

* மனசுக்கு இதமாக இசையை கேட்பதும் நல்லது.


பொதுவானவை + டிப்ஸ்