முதல் பக்கம் » பெண்கள் » சாதனைப் பெண்கள் » தமிழக எறி பந்தின் இளைய தூண் - ஸ்வேதா!

Swetha, The Youngest of Tamilnadu Throwball Team

-

தமிழக எறி பந்தின் இளைய தூண் - ஸ்வேதா!

சாதனைப் பெண்கள்:தமிழக எறி பந்தின் இளைய தூண் - ஸ்வேதா!

கூடல் - Friday, April 27, 2012
Swetha, The Youngest of Tamilnadu Throwball Team - Women Secrets of Success

விட்டுவிட்டுச் சிணுங்கும் வானத்தால் சொதசொதவென்று இருக்கிறது தரை. ஆங்காங்கே குளம் கட்டித் தேங்கியிருக்கிறது, தண்ணீர். ஆனால் பந்தும் கையுமாய் சுற்றுப்புறம் மறந்து தீவிரப் பயிற்சியில் இருக்கிறார், ஸ்வேதா. தமிழக எறிபந்து அணியின் இளம் நட்சத்திரம். பேட்டிக்காக நாம் அவரை அணுக, பந்தை 'எறிந்து'விட்டுப் பேச வந்தார்...

எறிபந்து எப்படி உங்களுக்கு அறிமுகமானது?

எங்களின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை. நான்காம் வகுப்பு வரை அங்கு படித்த நான், அப்பாவுக்குப் பணியிடமாற்றம் ஏற்பட்டதால் சென்னை வந்தேன். இங்கே சோழிங்கநல்லூரில் உள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு சேர்ந்தேன்.
  
இப்பள்ளியில் எறிபந்து பிரபலமான விளையாட்டாக இருந்தது. அக்காக்கள் இதை ஆடுவதைப் பார்க்க, எனக்கும் ஆர்வம் வந்தது. அப்போது, விருப்பமுள்ளவர்கள் இவ்விளையாட்டுப் பயிற்சியில் சேரலாம் என்று தாளாளர் அறிவிக்க, நான் உடனே இணைந்து கொண்டேன்.

நீங்கள் முதன்முதலில் போட்டிக் களத்தில் இறங்கியது எப்போது?

எறிபந்து ஆடத் தொடங்கிய இரண்டாண்டுகளில், அதாவது 7-ம் வகுப்புப் படிக்கும்போது மதுரையில் நடைபெற்ற சீனியர் ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடினேன். அப்போது எங்கள் அணியில் இளையவள் நான்தான். ஆனால் சீனியர்கள் நல்ல ஊக்கமும், உற்சாகமும் அளிக்க சந்தோஷமாக ஆடினேன். அப்போட்டித் தொடரில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்றபோதும், எனக்கு அது நல்ல அனுபவமாக அமைந்தது.

முதல் வெற்றி...?

எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, மாநில அளவிலான போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணியில் ஆடினேன். அப்போது நாங்கள் நல்ல பயிற்சி பெற்றிருந்தோம். மேலும் அணியில் என்னுடன் எங்கள் பள்ளியைச் சேர்ந்த 9 மாணவிகள் ஆடினார்கள். எனவே எங்களுக்கு இடையே நல்ல புரிதல், பரஸ்பர ஒத்துழைப்பு இருந்தது. அதனால் சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் எங்களுக்கு வெற்றியும் கிடைத்தது.

நீங்கள் ஆடிய தேசியப் போட்டிகளைப் பற்றிக் கூறுங்கள்...

எட்டாம் வகுப்புப் படிக்கும்போது இந்தியப் பள்ளி விளையாட்டுகள் சம்மேளனம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியில் ஆடினேன். அந்த சப்-ஜூனியர் பிரிவு போட்டியில், அரையிறுதியில் ஆந்திர அணியிடம் தோற்றுவிட்டோம். ஆனால் அதன்பின் மராட்டிய அணியை எளிதாக வென்று மூன்றாவது இடம் பிடித்தோம். தொடர்ந்து 8 தேசியப் போட்டிகளில் ஆடிவிட்டேன். கடைசியாக, சென்னையில் கடந்த ஆகஸ்டில் ஜூனியர் தேசியப் போட்டியில் டெல்லியை வென்றோம்.

தற்போது தேசிய அளவில் தமிழக அணியின் நிலை எப்படியிருக்கிறது?

கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய அளவில் எறிபந்தில் தமிழகத்தின் கையே ஓங்கியிருக்கிறது. பெண்கள், ஆண்கள் இரண்டு அணிகளுக்கும் இது பொருந்தும். ஆனால் பெண்கள் அணியைப் பொறுத்தவரை இன்னும் கூடுதல் ஆதிக்கம் செலுத்திவருகிறோம். தற்போது தேசிய அளவில் நமக்குச் சவால் விடக்கூடிய அணிகள் ஏதும் இல்லை.

இந்த வெற்றிநடையின் ரகசியம் என்ன?

தமிழகத்தில் இந்த விளையாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், தமிழக எறிபந்துக் கழக நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு மிக்க ஆர்வமும்தான் முதல் காரணம். தவிர, நமக்கு நல்ல வசதிகள் இருக்கின்றன. தேசிய அளவிலான ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் நடத்தப்படும் முகாம்களும் ஒரு முக்கியக் காரணம்.

தற்போது உங்களுடன் சக மாணவிகள் யாரும் தமிழக அணியில் ஆடுகிறார்களா?

ஆமாம். ரம்யா என்ற சக மாணவி ஆடுகிறார். அவரும் நானும் இணைந்து தமிழக அணிக்குப் பல நேரங்களில் தூண் போல உறுதியாக நின்றிருக்கிறோம்.

அணியில் நீங்கள் எந்த நிலையில் ஆடுகிறீர்கள்? உங்களின் பலம் என்ன?

நான், நான்கு, ஐந்து நிலைகளில் ஆடுவேன். தற்காப்புக்கு, இந்த நிலையில் ஆடும் வீராங்கனை பலமாக இருப்பது முக்கியம். அப்படி நான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனது பலம் என்று பார்த்தால், 'லைன் சர்வீஸ்', 'டிராப்' நன்றாகப் போடுவேன்.

தமிழக அணிக்குத் தலைமை தாங்கியிருக்கிறீர்களா?

அணியில் சீனியர்கள் பலர் இருப்பதால் அந்த வாய்ப்பு அரிது. ஆனால் ஒருமுறை நான் தமிழக அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன். அதாவது, 10-ஆம் வகுப்புப் படிக்கும்போது மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் போட்டியில் தமிழக அணிக்குத் தலைமை தாங்கினேன். அதில் இறுதிப் போட்டியில் மத்தியப்பிரதேச அணியிடம் தோற்ற நாங்கள் இரண்டாவது இடம் பெற்றோம். உள்ளூர் அணி என்பது அவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

ஒரு கேப்டனாக உங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்?

ஆட்டத்தின் விறுவிறுப்பில் டென்ஷன் ஏறும், சக வீராங்கனைகள் தவறு செய்யும்போது கோபம் ஏற்படும். ஆனால் அதையெல்லாம் ஒருபோதும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டேன். அது நல்லதும் அல்ல. பொறுமையாகச் சக வீராங்கனைகளுக்கு எடுத்துக் கூறி, உற்சாகப்படுத்துவேன். அதேபோல ஒரு கேப்டன் என்பவர் தனது அணி வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எனவே அதை மனதில் நிறுத்திக்கொண்டு பொறுப்போடு ஆடுவேன். 
 
சீனியர் வீராங்கனைகள் உங்களுக்கு ஆலோசனை கூறுவதுண்டா?

நிச்சயமாக. திவ்யா, விஜயகுமாரி போன்ற சீனியர் ஆட்டக்காரர்கள் இப்படி இப்படியெல்லாம் ஆடலாம், இந்தக் குறைகளைத் தவிர்க்கலாம் என்று ஆலோசனை கூறுவார்கள். அதெல்லாம் போட்டிகளின்போது எனக்குப் பெரிதும் கைகொடுக்கும்.

எறிபந்து தவிர உங்களுக்குப் பிடித்த விளையாட்டு?

எங்க தாத்தா பரமசிவன் அந்தக் காலத்தில் ஒரு பிரபலமான கால்பந்து வீரர். அதனால்தானே என்னவோ எனக்குக் கால்பந்து மிகவும் பிடிக்கும்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடும்படி உங்களை உந்திக் கொண்டே இருப்பது எது?

ஏற்கனவே கூறியமாதிரி தாத்தா ஒரு விளையாட்டு வீரர் என்பதால் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும் என்று தூண்டிக்கொண்டே இருப்பார். அதேபோல பாட்டி விஜயலட்சுமி. போட்டிகளில் வென்றுவந்த பதக்கங்களை அவர்கள் கழுத்தில் போட்டு அழகு பார்ப்பது எனக்குச் சந்தோஷம், அவர்களுக்கும் சந்தோஷம்.

எங்கள் பள்ளித் தாளாளர் ரெக்ஸ் ஆப்ரஹாம், முதல்வர் ஜேனட் ஆகியோர் தேவையான உதவிகளை அளித்து வருகிறார்கள். நாங்கள் போட்டிகளில் வென்றுவரும்போது விருந்து, பணப்பரிசு கொடுத்துப் பாராட்டுவார்கள். எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் முத்துக்குமார், காமராஜ் ஆகியோர் கூடவே இருந்து வழிகாட்டி ஊக்குவிப்பார்கள். தமிழக அணி மீது தனிப்பட்ட அக்கறை கொண்ட எறிபந்துக் கழகச் செயலாளர் பாலவிநாயகம் பற்றியும் கூற வேண்டும்.

பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறீர்களா?

தமிழக எறிபந்துக் கழகத்தின் தலைவரான ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திர பாபுவை சமீபத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.

வீட்டில் உங்களுக்கு ஆதரவு எப்படி?

போட்டிகளுக்காக வெளிமாநிலங்களுக்குப் போக நேர்கையில், ஒரு பெண்ணான உன் மகளை எப்படித் தனியாக அனுப்புகிறாய் என்று பலர் கேட்பதையும் தாண்டி அம்மா சிவகாமி ஊக்குவித்து வந்திருக்கிறார். அதைப் போல அப்பா முத்துராஜ், அண்ணன் மணிகண்டனும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

அடுத்து...?

விளையாட்டில் இருந்தாலும் நான் படிப்பில் சோடை போனதில்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 முடிக்கும் நான் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்து, டாக்டர் ஆகப் போகிறேன்!

வருங்கால 'டாக்டர் ஸ்வேதா', பந்தை எடுத்துக் கொண்டு மறுபடி பயிற்சிக்கு ஓட, நாம் கிளம்பினோம்.

சாதனைப் பெண்கள்

Site Meter