முதல் பக்கம் » பெண்கள் » சாதனைப் பெண்கள் » சாதனைப் பெண் அனிதா குப்புசாமி!

Anita Kuppusamy - Singer - Naattupurapaattu

-

சாதனைப் பெண் அனிதா குப்புசாமி!

சாதனைப் பெண்கள்:சாதனைப் பெண் அனிதா குப்புசாமி!

எம்.எஸ்.வி. இரகுராமன் - Thursday, January 27, 2005
Anita Kuppusamy - Singer - Naattupurapaattu - Women Secrets of Success

தமிழ் இவருக்கு தாய்மொழி இல்லை. இருந்தாலும் நாட்டுப்புறத் தமிழ் பாடல்களுக்கு உயிர் கொடுத்து வருபவர் இவர். ஆரவாரம் இல்லாமல் அனைவரையும் தன் இன்னிசைக் குரலால் கவர்ந்துவரும் அவர்தான் அனிதா குப்புசாமி. கணவருடன் மேடைக் கச்சேரி, டி.வி.யில் வணக்கம் தமிழகம், குழந்தைகள் நிகழ்ச்சி என சாதனை புரிந்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:

இசையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

நான் மேட்டுப்பாளையத்தில் படிக்கும்போதே என் குரல் வளத்தை நண்பர்கள் மற்றும் பலர் பாராட்டினர். இதனால் கோவையில் பி.ஏ. மியூசிக் சேர்ந்தேன். இதற்கே உ.பி.யில் உள்ள எங்கள் அகர்வால் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பல போராட்டங்களுக்குப் பிறகே சேரமுடிந்தது. பின்னர் சென்னைக்கு வந்து எம்.ஏ. மியூசிக் சேர்ந்தேன். இங்குதான் புஷ்பவனம் குப்புசாமியைச் சந்தித்தேன்.

அவருடைய பாடல் நிகழ்ச்சியைக் கேட்டபோதுதான் எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஈர்ப்பு வந்தது. பின்பு அவருடன் நாரத கான சபாவில் பாடினேன். எங்கள் பாடலுக்கு வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பாடினேன். அவரும் என்னுடன் பாடுகிறீர்களா எனக் கேட்டார். நானும் சரி என்றேன். இப்படியே எங்கள் காதலும் வளர்ந்து 1992-ல் கல்யாணத்தில் முடிந்தது. 95-ல் குழந்தை பல்லவி பிறந்தாள். இப்போது நான்காம் வகுப்பு படிக்கிறாள்.

நாட்டுப்புறப் பாடல்களில் ஈடுபாடு வரக் காரணம்?

இதற்கு என் கணவர்தான் முழுக் காரணம். ஆரம்பத்தில் இவர் பாடலைக் கேட்டபோது இது எந்த சினிமா படத்தில் வருகிறது என்றுதான் கேட்டேன்.

தமிழகத்தில் எந்தக் கிராமத்திற்குப் போனாலும் அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பேன். அவர்கள் பேசும்விதத்தைப் பார்ப்பேன். அவர்களை பாட வைத்துக் கேட்பேன்.

இதுவரை 2000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, லண்டன், ஸ்விட்சர்லாந்து, நார்வே, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி என பலதரப்பட்ட நாடுகளுக்குச் சென்று கச்சேரி நடத்தியுள்ளோம்.

அங்கெல்லாம் அவர்கள் தங்கள் உணர்வுகளை உடனே காண்பித்துவிடுவார்கள். காணாததைக் கண்டால் எப்படி இருக்கும்? அதுபோல தமிழ் நிகழ்ச்சி என்றால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

நாட்டுப்புறப் பாடல்கள் அழியக்கூடாது என்பதற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 15 முதல் 20 கேசட்டுகள் பாடியுள்ளோம். வீடியோ சி.டி.யில் பாடவில்லை. வெளியிடக் கேட்கிறார்கள். அதற்கான நேரம் வரவில்லை.

சினிமா பாடகியாக வேண்டும் என்ற ஆசை என்ன ஆனது?

சினிமா பாடகியாக ஆகியிருந்தால், பத்தோடு பதினொன்றாகி இருப்பேன். இப்போது யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை உள்ளது. என்னை மக்கள் மரியாதை கலந்த பார்வையோடு பார்க்கிறார்கள். அணுகுகிறார்கள். சினிமா பாடகியாகப் போயிருந்தால் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்காது. இங்கு நானே ராஜா, நானே மந்திரி. யாரிடமும் நின்று வாய்ப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் பாடகியாகி ஒரு சின்ன வட்டத்துக்குள் சிக்காமல் இருந்ததற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

சினிமாத்துறையில் எவ்வளவு பெரிய திறமைசாலியும் அடிமைப்பட்டுத்தான் இருக்க வேண்டும். திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி வழங்குவது பற்றி?

எனக்கு பொதுவாகவே குழந்தைகள் பிடிக்கும். நாமும் குழந்தையாக மாற வேண்டும். என்னிடம் எந்தக் குழந்தையும் சீக்கிரம் ஒட்டிவிடும். இதையெல்லாம் கவனித்த என் கணவர் மலரும் மொட்டும் நிகழ்ச்சி செய்தால் என்ன என்று கேட்டார். அதன்படியே பைலட் ஷோ எடுத்துப் பார்த்தார்கள். அது பிடித்துப்போகவே கடந்த 2 வருடமாக செய்துவருகிறேன்.

வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் பழமொழி கதைகள், விடுகதை என வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்துகிறோம்.

அழிந்துவரும், மறைந்துவரும் பழமொழிகளைத் தேடிக்கண்டுபிடித்து அது தொடர்பான கதைகளைச் சொல்லி வருகிறோம். இந்நிகழ்ச்சியை பார்ப்பதால் ஸ்கூல் பிள்ளைகள் பள்ளிக்கு லேட்டாகப் போகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது.

வெளிநாட்டிலுள்ள ஒரு அன்பர் வேலைக்கு நேரமாகிவிட்டால் டிவியை ஆன் செய்துவிட்டு போனை பக்கத்தில் வைக்கச் சொல்லி தன்னுடைய செல்போனில் எங்கள் நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டே ஆபீசுக்குச் செல்கிறேன் என்றார்.

சினிமா வாய்ப்பு?

நான் படிக்கும்போதே வந்தது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதி கேரக்டருக்கு கூப்பிட்டார்கள். ஆனால் நடிக்கவில்லை. விவரம் தெரியாதபோது சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. விவரம் தெரிந்த பிறகு ஆர்வம் போய்விட்டது.

இப்போது அக்கா, ஸ்கூல் டீச்சர் வேடம் கொடுக்கிறேன் என்கிறார்கள். எனக்கு நடிப்பதற்கு ஆர்வம் இல்லை. மேலும் நடிப்பதற்கு எனக்கு எந்தத் தடையும் இப்போது இல்லை.

இதுவரை சாதித்தது...

என் அம்மாவின் தூண்டுதலால்தான் இத்துறைக்கே வந்தேன். அவர் அடிக்கடி சொல்லுவார். பிறந்தால் ஏதேனும் சாதித்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று. சாதனைக்கு எல்லையே கிடையாது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

உலகம் அறிந்த ஆண் மகனை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்தது. நான் சாதிப்பதற்குத்தான் இவரை திருமணம் செய்தேன்.

மலரும் மொட்டும் நிகழ்ச்சியை நான் ஆரம்பத்தில் நடத்தியபோது எங்கள் அகர்வால் குடும்பத்தில் உள்ளவர்கள் கூத்தாடி என்று ஏளனமாக சொன்னார்கள். இப்போது அவர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்து தங்கள் குழந்தைகளையும் நிகழ்ச்சியில் சேர்க்கச் சொல்லி கேட்கிறார்கள்.

என்னுடைய காதல் திருமணத்திற்குப் பிறகு எங்கள் சமூகத்திலும் காதல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்கள். எங்கள் கல்யாணம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது.

என் குழந்தையும் தெளிவான குழந்தை. என் வெற்றிக்கு முழுக் காரணம் என் குழந்தைதான். அது முரண்டு பிடித்திருந்தால் என் தாய்ப்பாசம் நான் நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தடுத்திருக்கும்.

எல்லா கலைகளையும் சேர்த்துக் கற்றுக்கொடுக்க ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நிறைய பேர் கேட்கிறார்கள். நேரம் வரும்போது நடக்கும்.

நம் பண்பாடு, கலாசாரம் அழிந்துவருகிறது. இவையெல்லாம் அழியாமல் இருக்க என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைப்பேன். மேடையிலும் இதுபற்றிக் கூறுவோம். இதை அனைவரும் பின்பற்றுகிறார்கள்.

எல்லாவற்றையும்விட சினிமா வாடை இல்லாமல் எந்த ஆர்ப்பாட்டமும் கவர்ச்சியும் இல்லாமல் ஒரு ஆட்டம்கூட இல்லாமல் ஒரு பாட்டால், மக்கள் இசையின் மூலமாக மக்களை உட்கார வைப்பது என்பதே ஒரு சாதனைதான்.

பாடலைத் தவிர, பரதநாட்டியமும் தெரியும். பிறருக்குச் சொல்லித்தரும் அளவுக்குத் தெரியும். படங்கள் வரைவேன். கைத்தொழில்கள் நிறைய தெரியும். பெயிண்டிங் தெரியும்.

கல்லூரியில் நான் படிக்கும்போது எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவேன். அவினாசிலிங்கம் கல்லூரியில் Queen of the college பட்டத்தை ஒருமுறை வாங்கினேன். அடுத்த வருடம் நிறைய பேர் போட்டியில் சேரவே தயங்கினர். நானே வெற்றி பெறுவேன் என்பதால் பேசாமல் என்னை நடுவராகப் போட்டுவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நன்றி: தினமணி

சாதனைப் பெண்கள்

Site Meter