முதல் பக்கம் » பெண்கள் » சாதனைப் பெண்கள் » கைகளில் கலை வண்ணம்

Meganthi...

-

கைகளில் கலை வண்ணம்

சாதனைப் பெண்கள்:கைகளில் கலை வண்ணம்

மீனாட்சி - Thursday, September 15, 2005
Meganthi... - Women Secrets of Success

பட்டுப்போன்ற உள்ளங்கைகளில் மெஹந்திச் சித்திரங்கள் தீட்டி, பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறார் கோவையைச் சேர்ந்த மீனாட்சி.

"கோனில்" அடைக்கப்பட்ட மெஹந்திப் பசை வழியே பூக்கள், பறவைகள், கோலங்கள் "மோடிப்" எனப்படும் மணப்பெண் உருவங்கள் போன்ற எண்ணிலடங்கா வண்ணச் சித்திரங்கள் உள்ளங்கைகளை அலங்காரமாய் நிறைக்கின்றன. மிகக் குறுகிய நேரத்தில் "மெஹந்தி" போடும் தனித்துவத்தால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறார் மீனாட்சி.

இத்தொழிலில் 16 வருட அனுபவ முதிர்ச்சியை இவரது விரல்கள் காட்டுகின்றன.

"முன்பெல்லாம் மணப்பெண் ஒருவருக்கு கை, கால்களில் மெஹந்தி தீட்ட 6 மணி நேரமாகும். பயிற்சி மற்றும் அனுபவத்தால் இப்போது ஒன்றரை மணி நேரத்துக்குள் மணப்பெண்ணின் கைகளை வண்ணச் சித்திரங்களால் நிரப்ப முடிகிறது" என்கிறார் அடக்கத்துடன்.

மீனாட்சி படித்தது பி.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி. திருமணமானதும், பொழுது போக்காக குஜராத்திப் பெண் ஒருவரிடம் மெஹந்தி போடக் கற்றுக் கொண்டார். இடைவிடாத ஆர்வத்துடன் தொடர்ந்து புதுப்புது டிசைன்களைப் போட்டுப் பயிற்சியும் செய்ததால், மெஹந்தி போடுவதில் வித்தியாசத்தைப் புகுத்த முடிந்தது. இடையிடையே மெஹந்தி கலை நிபுணர்கள் பலரிடம் சென்று விதவிதமான பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார்.

தான் கற்ற கலையைக் கொண்டு வருமானம் ஈட்ட முனைந்தார் மீனாட்சி. வீட்டிலேயே பார்லர் அமைத்து மெஹந்தி போட்டு விடுவது அவ்வளவாகச் சரிப்பட்டு வராது என்று தோன்றியதால், கோவையில் உள்ள பிரபல பியூட்டி பார்லருக்கு வரும் பெண்கள் மெஹந்தி போட விரும்பினால் மீனாட்சிக்குத் தகவல் தருவார்கள். சம்பந்தப்பட்ட பார்லருக்குச் சென்று இவர் போட்டு விடுவார். இப்படி தற்போது 4 பெரிய பார்லர்களுக்கும், 5 சிறிய பார்லர்களுக்கும் பணியாற்றி வருகிறார்.

இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு வீடு தேடி வந்து மெஹந்தி போட்டுச் செல்பவர்களும் உள்ளனர். "கை கால்களில் மெஹந்தி போட விரும்புபவர்களுக்கு டிசைன்களுக்கேற்ப ரூ.600 முதல் ரூ.900 வரை பியூட்டி பார்லர்கள் கட்டணம் நிர்ணயித்துள்ளன. இதில் பியூட்டி பார்லர்களுக்குத் தரவேண்டிய கமிஷன் போக கணிசமான வருமானம் கிடைக்கிறது. திருமணக் காலங்களில் நிற்கக் கூட நேரமில்லாமல் ஆர்டர்கள் வந்தபடி இருக்கும் என்று உற்சாகத்துடன் பேசுகிறார் மீனாட்சி. மெஹந்தியில் பொதுவாக Traditional எனப்படும் பாரம்பரிய டிசைன்கள், அராபிக் டிசைன்கள், ஜர்தோஷி டிசைன்கள் போன்ற மூன்று வகைகள் உள்ளன. பாரம்பரிய டிசைன்களில் போடும் மெஹந்தி 15 நாட்கள் வரை அழிவதில்லை. அராபிக் டிசைன்களின் ஆயுள்காலம் ஒருவாரம் மட்டுமே. புடவைக்கேற்ற வண்ணங்களில் போடும் ஜர்தோஷி வகை டிசைன்கள் ஒரு நாள் மட்டுமே கைகளில் (கால்களில்) தங்கக் கூடியவை. இந்த டிசைன்களுடன் கற்கள், தங்க ஜரிகை வேலைப்பாடுகளைப் பயன்படுத்தி மெஹந்தி தீட்ட விரும்புவோரும் உள்ளனர்.

மெஹந்திப் பொடி என்று கடையில் விற்கும் மருதாணிப் பொடிதான், மெஹந்திப் பசைக்கான மூலகர்த்தா. இந்தப் பொடியுடன் வெல்லம், மூலிகைத் திரவங்கள், ஒரு சில ரசாயனங்கள் (கை, கால்கள், தோலுக்கு கெடுதல் விளைவிக்காதவை) கலந்து மெஹந்திப் பசை தயாரிக்கப்படுகிறது.

"மணப்பெண்கள் பொதுவாக Traditional டிசைன் மெஹந்திகளையே தேர்வு செய்கிறார்கள். வரவேற்பு, நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களுக்கு அராபிக் டிசைன்களும், விழாக்கள், விசேஷங்களுக்கு ஜர்தோஷி டிசைன்களும், பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகிறது. ஏராளமானோருக்கு மெஹந்தி போடப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

பிரபல கல்லூரிகள், விழாக்களில் மெஹந்திப் போட்டிக்கு நடுவராகப் பங்கேற்றிருக்கிறார். கேரளம் போன்ற அண்டை மாநிலங்களுக்குச் சென்று, மெஹந்தி போடுவது குறித்த பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்.

"மெஹந்திக்கான பலவித டிசைன்களை நானே உருவாக்குகிறேன். பல டிசைன்களை மும்பையிலிருந்து வாங்கிப் பயன்படுத்துகிறேன். உள்ளூர் மட்டுமன்றி வெளிநாட்டுப் பெண்களும் மெஹந்தி போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்" என்கிறார் மீனாட்சி.

முன்பெல்லாம் உள்ளங்கை மற்றும் மணிக்கட்டு வரைதான் பெண்கள் மெஹந்தி போட்டுக் கொள்வார்கள். இப்போது முழங்கை, முழங்கால் வரை மெஹந்தி சித்திரங்களைத் தீட்ட விரும்புகிறார்களாம். குஜராத் போன்ற வட மாநிலப் பெண்களும், மடிசார் கட்டி மணமேடையில் அமரும் மணப்பெண்களும் முழங்கால் வரை மெஹந்தி தீட்ட விரும்புகின்றனர் என்கிறார் மீனாட்சி.

திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்கள் பலர் இவரிடம் வந்து ஆர்வத்துடன் மெஹந்தி போடக் கற்றுக் கொள்கிறார்கள்.

நல்ல பயிற்சி, இடைவிடாத முயற்சி, புதுப்புது டிசைன்களை உருவாக்கும் Creativity. அத்துடன் வீட்டில் கொஞ்சம் இடமும் இருந்துவிட்டால் போதும். மெஹந்தி போட்டே ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். வீட்டில் இடவசதி இல்லாதவர்கள், பியூட்டி பார்லர்களைத் தொடர்புகொண்டு நிரந்தர ஆர்டர் பிடித்து நல்ல வருமானம் பெறலாம்.

வெளிநாட்டில் மெஹந்தி போட்டு விடுபவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வெளிநாட்டு மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாக விரும்பும் பலரும் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டால், வீட்டிலிருந்தபடியே வருமானம் பார்க்க முடியும் என்கிறார் மீனாட்சி.

சாதனைப் பெண்கள்

Site Meter