முதல் பக்கம் » பெண்கள் » சாதனைப் பெண்கள் » விஸ்டம் சர்வதேச விருது பெற்ற பார்வையற்ற மாணவி - ஆன்டனி செல்வி

Antony Selvi a blind girl student is the international award winner of wisdom

-

விஸ்டம் சர்வதேச விருது பெற்ற பார்வையற்ற மாணவி - ஆன்டனி செல்வி

சாதனைப் பெண்கள்:விஸ்டம் சர்வதேச விருது பெற்ற பார்வையற்ற மாணவி - ஆன்டனி செல்வி

கூடல் - Thursday, December 03, 2009
Antony Selvi a blind girl student is the international award winner of wisdom - Women Secrets of Success

ஓட்டப்பந்தயம், நீளந்தாண்டுதல், குண்டு எறிதல், வாலிபால், கணினித் திறன், படிப்பு... என்று எதையும் விட்டு வைப்பதில்லை ஆன்டனி செல்வி. இன்னொரு விஷயத்தை அறிந்தால் உங்கள் புருவம் உயரும். செல்வி பார்வைத்திறன் குறைந்தவர். சாதாரண சூழ்நிலையில் பிறந்து அசாதாரண சாதனைகளை நோக்கிப் பயணித்து வருகிறார் செல்வி.

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

அப்பா பங்குராஜ் கொத்தனார். அம்மா குணசிலி இல்லத்தரசி. அண்ணன் விமான நிலையத்தில் பணிபுரிகிறார். அக்காவுக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு தங்கை. நான் எத்திராஜ் கல்லூயில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு பயின்று வருகிறேன்.

பார்வைத்திறன் குறைபாட்டைத் தாண்டிச் சாதிக்கும் உறுதி பிறந்தது எப்படி?

மூளைக்குச் செல்லும் பார்வை நரம்பு சரியாக வளர்ச்சி அடையாததால் பிறவியிலேயே எனக்குப் பார்வைத்திறன் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. எதிரே இருப்பவர்களை ஒரு உத்தேசமான உருவமாகத்தான் அறிய முடியும். நான்காம் வகுப்பு வரை நான் ஒரு பொதுவான பள்ளிக்குச் சென்று வந்தேன். அப்போது ஆசிரியை கரும்பலகையில் எழுதிப் போடும் எதையும் என்னால் பார்க்க முடியாது என்பதால், நான் பெயரளவுக்குத்தான் அங்கு சென்று வந்தேன். அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள, "பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்டில்" ஐந்தாம் வகுப்பு முதல் விடுதியில் தங்கிப் படித்தேன். அப்போதுதான் விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

முதன்முதலாகப் பெற்ற வெற்றி?

முதன்முதலாக பள்ளி விளையாட்டு விழாவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று முதலிடம் பெற்றேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது சென்னையில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான மாநிலப் போட்டியில் பங்கேற்று ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்தேன். தொடர்ந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வென்று வருகிறேன். தவிர, குண்டு எறிதல், நீளந்தாண்டுதல் போன்ற போட்டிகளில் மாநில அளவில் வெற்றிகளைப் பெற்றுள்ளேன். விளையாட்டுக்காக மாநில அளவில் 4 கேடயங்களையும், மாவட்ட அளவில் 7 கேடயங்களையும் பெற்றிருக்கிறேன். சென்னை மாவட்ட வாலிபால் அணியின் கேப்டனாகவும் உள்ளேன். மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஆறு முறை எங்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

பார்வைக் குறைபாட்டை மீறி நீங்கள் கணினித் திறன் பெற்றது எவ்வாறு?

பார்வையற்றவர்களாலும் கணினி கற்றுக்கொள்ள முடியும், அதற்கான வசதிகள் உள்ளன என்றே பல கணினி நிறுவனத்தினருக்குத் தெரியவில்லை. மிகுந்த போராட்டத்துக்குப் பின்தான் ஒரு கணினி நிறுவனத்தில் சேர்ந்து "எச்.டி.எஸ்.ஏ" பயின்றேன். பார்வையற்றவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள "ஜாஸ்" மென்பொருள் மூலம் நான் கணினி கற்றுக்கொண்டேன். பார்வையற்றோருக்கான "பிரெய்லி" புத்தகங்கள் கிடைப்பதாலும், பலர் உதவி புரிவதாலும் படிப்பதில் கஷ்டம் ஏதும் இல்லை.

பெற்ற விருதுகள், பரிசுகள்...?

"சிறந்த பார்வையற்ற மாணவி"க்கான "விஸ்டம் சர்வதேச விருது" கடந்த 2006-ம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி சபர்வால் அதை வழங்கினார். 2007-ம் ஆண்டு ஒரு பத்திரிகையின் சார்பில் நடத்தப்பட்ட வினாடி- வினாடி போட்டியில் வெற்றி பெற்றதற்காக 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. "யூ.டி.ஐ.எஸ்.போரம்" என்ற அமைப்பு கடந்த ஆண்டு பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கணினித்திறன் போட்டியை கோவையில் நடத்தியது. அதில் தமிழகத்திலிருந்து ஒரே மாணவியாக நான் வெற்றி பெற்றேன். அதற்கு எனக்கு 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "லேப்டாப்" பரிசாக வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த லூயிஸ் பிரெய்ல் என்ற அமைப்பு, கடந்த 2006-ம் ஆண்டு சிறந்த பார்வையற்ற மாணவியாக என்னைத் தேர்ந்தெடுத்து 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியது. அதே அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று 5 ஆயிரம் மதிப்புள்ள சி.டி.கள் பெற்றேன். எங்கள் கல்லூரியில் "சிறந்த மாணவி"யாக இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். யூ.டி.ஐ.எஸ்.போரம் சார்பில் வருடந்தோறும் எனக்கு உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

படிப்பில் நீங்கள் எப்படி?

ஆரம்பம் முதலே நான் படிப்பில் வகுப்பில் முதலிடத்தில் இருந்து வந்திருக்கிறேன். பிளஸ் 2-வில் பள்ளியில் முதலிடம் பெற்றதற்காக பரிசு பெற்றிருக்கிறேன். நாடகம், நடனம் போன்ற கலைப் போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்திருக்கிறேன். படிப்பில் சிறந்து விளங்கியதற்காக சின்னச் சின்னதாக ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

பார்வைத் திறன் குறைபாடு குறித்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?

நான் எப்போதும் அதை ஒரு குறைபாடாக நினைத்தது இல்லை. என்னைவிடப் பரிதாபமான நிலையில் உள்ளவர்களுக்கு எனது நிலை எவ்வளவோ மேல் என்று நினைப்பேன். ஆனால் எனக்கு நெருங்கிய யாராவது எனது பார்வைக் குறைபாட்டைக் குத்திக்காட்டிப் பேசினால்தான் மனம் உடைந்துவிடுவேன். ஆனால் எனது குடும்பத்தினர் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர். அப்பா, "உன் மேல் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்... நீதான் எங்களைக் காப்பாற்றப் போகிறாய்" என்பார். அம்மாவும் என்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகச் சொல்வார். போட்டிகளில் கலந்துகொள்வதில் எனக்கு ஆர்வமில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்காகவே நான் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.

பிரபலங்கள் பாராட்டியது உண்டா?

நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த 2007-ம் ஆண்டு எனக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சிவக்குமாருடன், சூர்யா, கார்த்தி ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது சிவக்குமார், "உனது சாதனைகளை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது எந்த உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேள்" என்றார். நான் படித்த பள்ளிக்கு வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், என்னைப் பாராட்டிச் சில வார்த்தைகள் பேசினார்.

எதிர்காலத் திட்டங்கள்...?

ஆங்கிலப் பேராசிரியை ஆக விரும்புகிறேன். பார்வையற்றவர்களில் முதல் முறையாக ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. மற்றவர்களுக்கு உதவுவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். ஒரு நல்ல நிலையை அடைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருக்க விரும்புகிறேன்.

மலர்ந்த புன்னகையுடன் முடிக்கிறார் ஆன்டனி செல்வி.

உங்களுக்கு ஆதங்கம் ஏதாவது..?

பார்வைத்திறன் குறைந்தவர்கள் அனைவரும் தங்களின் சொந்தக் காலில் நிற்க விரும்புகின்றனர். ஆனால் எங்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன. அரசு சார்பில் ஆசிரியப் பணி வாய்ப்பு உண்டு என்றாலும் அதில் சில இடங்களே உள்ளன. தனியார் நிறுவனங்களில் முற்றிலுமாக நிராகரித்து விடுகிறார்கள். நான் பல நிறுவனங்களுக்கு நேர்முகத்துக்குச் சென்று வெறுத்துப் போய்விட்டேன். எங்களால் வேலை பார்க்க முடியுமா என்று அறிவதற்குக் கூட அவர்கள் தயாராக இல்லை. தட்டிக்கழிக்கவே நினைக்கின்றனர். அரசும் தனியாரும் இந்நிலையை மாற்ற முன்வர வேண்டும்.

சாதனைப் பெண்கள்

Site Meter