இந்தியாவுக்கு பல பதக்கங்களை பெற்று தருவதே லட்சியம்! - பொன்.என்.கிருத்திகா
"செக்" என்ற வார்த்தைக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. செக் என்ற காசோலையாகட்டும்... செஸ் விளையாட்டில் எதிராளிக்கு நெருக்கடி கொடுக்க வைக்கப்படும் "செக்" ஆகட்டும்... மிகவும் மதிப்பு வாய்ந்த வார்த்தை. அப்படி சர்வதேச அளவில் பலருக்கும் செக் வைத்து, வெற்றி மெடல்களை சுமந்து வருகிறார் அண்ணா பல்கலைக் கழக மாணவி பொன்.என்.கிருத்திகா!
செஸ் ராணியாகத் திகழும் கிருத்திகாவின் பேச்சில் படுபாந்தமும், வார்த்தையில் சாந்தமும் இழையோடுகின்றன! அவரிடம் பேசியபோது,
"எங்க வீட்டில் எல்லோருமே ஜாலியாக செஸ் விளையாடுவோம். குறிப்பாக பாட்டி பொன்னம்மாவுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதனால் வீட்டில் அடிக்கடி பாட்டி என்னுடன் செஸ் விளையாடுவார். அவுங்க தோத்து, என்னை ஜெயிக்க வைப்பாங்க! சென்னை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் செகன்டரிப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, தனித் திறமைப் பிரிவில், செஸ் விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன். தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தேன். முதன் முதலாக பள்ளி அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்றேன். அதன்பின்னர் செஸ் என்பது எனக்கு வாழ்க்கையாகி விட்டது! முன்பு மியூசிக் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தேன். செஸ் போட்டியில் பங்கேற்ற பின்னர், அதனையும் விட்டுவிட்டேன்" என்று தனது வெற்றியின் அடையாளச் சின்னங்களான பதக்கங்கள், பரிசுகள் மற்றும் விருதுகளை வரிசையாக எடுத்து காண்பிக்கிறார் கிருத்திகா. இவர் பிரபல செஸ் பயிற்சியாளர் ரவிச்சந்திரனிடம் பயிற்சி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசுகையில், "செஸ் விளையாடினால் புத்திக் கூர்மை அதிகமாகும். வீட்டில் அடிக்கடி செஸ் விளையாடியதால் எனக்கு ஜாலியாக இருந்தாலும், படிப்பில் புத்திக் கூர்மையுடன் படிக்கவும் உதவியது. முதன்முதலாக 2001-ம் ஆண்டில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்றேன். அதன்பின்னர் தொடர்ந்து 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். 2004-ம் ஆண்டில் ஆசிய அளவிலான போட்டியில் சாம்பியன் வென்றேன். 2008-ம் ஆண்டில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். சர்வதேச அளவில் தற்போது 12-வது இடத்தில் உள்ளேன்! தற்போது செஸ் விளையாட்டில் என்னுடைய ரேட்டிங் 2215. பிரபல சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடியுள்ளேன்! தற்போது எனக்கு எச்.பி.எல். நிறுவனம் ஸ்காலர்ஷிப் தர முடிவு செய்துள்ளது. கடந்த ஒன்பது வருடங்களில் கிட்டத்தட்ட 400 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளேன்.
எனக்கு செஸ் தவிர, கேரம், ஷட்டில், டென்னிஸ் ஆகியவையும் தெரியும்" என்று மூச்சு விடாமல் பேசியவரிடம், செஸ் போட்டியில் விளையாடுவதற்கு, அதிகமாக மூளைப்பயிற்சி தேவை. அதற்கு எந்த மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறீர்கள்? என்றோம்,
"போட்டி தொடங்குவதற்கு முன்பாக, அரை மணி நேரம் யோகா மற்றும் தியானம் செய்வேன். பின்னர் அதிக நேரம் சாமி கும்பிடுவேன். எனக்கு அருகில் இருப்பவர்களிடம் பாஸிட்டிவ்வாக பேசும்படி கூறி விடுவேன். அப்புறம் கொஞ்சம் சாக்லேட்ஸ் சாப்பிடுவேன்.
ஏனென்றால், சில போட்டிகளில் 7 மணி நேரம் வரை உட்கார்ந்து விளையாட வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது நம்முடைய கவனத்தையும் இம்மி பிசகாமல் கூர்ந்து கவனித்து விளையாட வேண்டும். இப்படி எந்த விளையாட்டிலும் இல்லை. செஸ் விளையாட்டை தொடர்ந்து விளையாடினால் ஞாபக சக்தி அதிகரிக்கும். செஸ் போட்டியின் போது அட்டாக்கிங் மற்றும் டிபென்ஸ் பாணியில் விளையாடுவேன் என்றாலும், அட்டாக்கிங் என்னுடைய ஸ்பெஷல்!
தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிஸ் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறேன். என்னுடைய அப்பா நமச்சிவாயம் சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பெற்றோருக்கு ஒரே செல்லப் பெண் என்பதால் வீட்டிலும் எனக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வருகின்றனர். என்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள ஹாரிபாட்டர் மற்றும் கார்ட்டூன் புத்தகங்களை வாசிப்பேன். அவ்வப்போது டிவி பார்ப்பேன்.
2004-ம் ஆண்டில் முதன் முதலாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றதை மறக்க முடியாது. ஏனென்றால், அதன்மூலம் எனக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்தது.
எதிர்காலத்தில் இன்ஜினீயரிங் முடித்து செட்டில் ஆகவேண்டும். செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பல பதக்கங்களை வென்று தர வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்று கூறும் செஸ் ராணி கிருத்திகா, தினமும் 12 மணி நேரம் செஸ் விளையாடி பயிற்சி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
சாதனைப் பெண்கள்
- பாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா!
- சக்கர நாற்காலியில் சுழலும் வாள் வீராங்கனை!
- ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவதே லட்சியம் - திவ்யா
- எறிபந்தில் எனக்கு நான்தான் ரோல் மாடல் - விஷாகா!
- எனக்கு பிடிச்ச டென்னிஸூம் படிப்பும் - ஐஸ்வர்யா
- சாதிக்கும் ஹெப்டத்லான் தாரகை!
- கலைக்காக மருத்துவப் படிப்பை துறந்த ஐஸ்வர்யா!
- அமெரிக்கர்களையே வியக்க வைத்த சென்னை பொண்ணு!
- பயிற்சியாளர்களை கௌரவிக்கும் ''ஸ்ரீநிதி சகோதரிகள்''!
- வாள் சண்டையில் விண்ணைத்தொடும் இரட்டை சகோதரிகள்!






