எறிபந்தில் எனக்கு நான்தான் ரோல் மாடல் - விஷாகா!

கூடல் - 2 July, 2010
Myself is the role model for me in Throw Ball - Vishaka! - Successful Stories of Women in Tamil

"விஷ்ஷ்ஷ்..." என்று விஷாகாவின் கையிலிருந்து பந்து சீறிச் செல்கிறது, எதிரணி வீராங்கனையை ஏமாற்றிப் புள்ளியாக மாறுகிறது. விஷாகா, தமிழ்நாடு பெண்கள் எறிபந்து ("த்ரோபால்") அணியின் கேப்டன். இவரது தலைமையின் கீழ் கடந்த 4 மாதங்களில் மட்டும் தமிழக மகளிர் எறிபந்து அணி "ஹாட்ரிக் வெற்றி"யைப் பெற்று அசத்தியுள்ளது. விஷாகாவை அவர் 12-ம் வகுப்புப் பயிலும் சென்னை அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் சந்தித்துப் பேசினோம்...

"எறிபந்தில் நான் இந்தளவுக்கு உயர்வேன் என்று நினைத்ததில்லை. சாதாரணமாகத்தான் எறிபந்து விளையாடத் தொடங்கினேன்.

நான் பத்தாம் வகுப்பு வரை மந்தைவெளியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தேன். ஐந்தாம் வகுப்பு படித்தபோது அங்கு மாணவ- மாணவியருக்குப் பயிற்சியாளர் விநாயகம் எறிபந்து பயிற்சி அளிப்பதைக் கண்டேன். அந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட, தினம் தவறாமல் எறிபந்து ஆட்டத்தைப் போய் பார்க்க ஆரம்பித்தேன்.

எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பயிற்சியாளர், என்னை அணியில் இணைந்து கொள்கிறாயா என்று கேட்டு சேர்த்துக் கொண்டார். ஒரே ஆண்டில் தேசிய அளவில் விளையாடும் அளவுக்கு உயர்ந்து விட்டேன். பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேசிய சப்- ஜூனியர் எறிபந்து போட்டியில் தமிழக அணி சார்பில் முதன்முதலாகப் பங்கேற்றேன். அப்போட்டியில் தமிழக அணி காலிறுதி வரை முன்னேறியது.

2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக அணிக்காக விளையாடி வருகிறேன். இதுவரை 15 தேசியப் போட்டித் தொடர்களில் ஆடி விட்டேன். தமிழக அணிக்காக முன்பு சப்-ஜூனியர் நிலையிலும், தற்போது ஜூனியர், சீனியர் நிலைகளிலும் ஆடி வருகிறேன். தமிழக அணியின் கேப்டனாக ஐந்து போட்டிகளில் செயல்பட்டிருக்கிறேன். அந்தப் போட்டிகள் அனைத்திலும் தமிழக அணிக்கு வெற்றிதான்.

அதிலும் கடந்த 4 மாதங்களில் எனது தலைமையில் தமிழக அணி பெற்ற "ஹாட்ரிக் வெற்றி" குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 4-வது தென்மண்டல தேசியப் போட்டி, அம்மாவட்டத்திலேயே கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெற்ற 32-வது சீனியர் தேசியப் போட்டி, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிப்ரவரியில் நடைபெற்ற 20-வது ஜூனியர் தேசியப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றோம். அதிலும் லூதியானாவில் நடைபெற்ற போட்டியில், "தொடரின் சிறந்த வீராங்கனை" பட்டத்தைப் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. மாநில சாம்பியன்ஷிப் போட்டியிலும் எனது தலைமையில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்றது.

சக வீராங்கனைகளை ஊக்குவித்து, பிரச்சினை ஏதும் எழுந்தால் உடனடியாகப் பேசித் தீர்த்து, ஆட்டத்தில் புரியும் தவறுகளைக் குத்திக்காட்டாமல் "இனி அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்வோம்" என்று தட்டிக் கொடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வது எனது பாணி.

யாரிடமும் நான் கோபத்தைக் காட்ட மாட்டேன். சிலர் என்னை சீண்டும்போது அதையும் "பாசிட்டிவாக"வே எடுத்துக் கொண்டு சாதிக்க முயல்கிறேன்.
 
கடந்த 2006-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற 29-வது தேசிய சீனியர் போட்டியில் டெல்லி அணியுடனான அரையிறுதி மோதலை என்னால் மறக்க முடியாது. இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் மோதியதால் ஆட்டத்தில் பொறி பறந்தது. "நான் முந்தி... நீ முந்தி" என்கிற மாதிரி ஆட்டம் போய்க் கொண்டிருந்தது. அப்போது "சர்வீஸ்" போட்ட நான், ஒரே மூச்சில் 9 புள்ளிகளைக் குவித்து இறுதிப் போட்டிக்கு அணியைக் கொண்டு சென்றேன். இறுதிப் போட்டியில் எங்களுக்கே வெற்றி.

தமிழக மகளிர் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் அணிகள் தற்போது இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கின்றன. தற்போது மேற்கண்ட அனைத்து நிலைகளிலும், தென் மண்டலப் போட்டியிலும் நாம்தான் சாம்பியன்கள். இதன்மூலம் தமிழகம் புதிய வரலாறு படைத்திருக்கிறது.

எறிபந்தில் நாம் சிறந்து விளங்குவதற்கு தமிழகத்தில் இவ்விளையாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், முறையான அமைப்புகளும்தான் காரணம். எறிபந்து விளையாட்டில் நமக்கு டெல்லி, ஆந்திரா ஆகியவை கடும் போட்டியாளர்களாக இருந்தாலும் நமது முன்னிலையைத் தகர்க்க முடியாது என்று உறுதியாகக் கூறலாம்.

எனது ஆட்டத்தைப் பொறுத்தவரை, "சர்வீஸ்", "டிராப்" ஆகியவற்றை எனது பலங்களாகக் கருதுகிறேன். எறிபந்து ஒரு அணி விளையாட்டு என்பதால் "அணி உணர்வு" முக்கியம் என்று எண்ணுகிறேன்.

எறிபந்தை "ஐடியா கேம்" என்று நான் சொல்வேன். பொறுமை, அதேநேரம் தேவைப்படும் நேரங்களில் வேகமாகச் செயல்படுவது, சமயத்துக்குத் தகுந்தாற்போல் ஆடும் திறன் ஆகியவை இவ்விளையாட்டில் முக்கியம். எறிபந்து எனக்குப் படிப்பு விஷயத்திலும் உதவி புரிகிறது. திட்டமிடுவது, ஒழுங்கு, கவனக் குவிப்பு ஆகியவற்றை இவ்விளையாட்டு எனக்கு அளித்திருக்கிறது.
 
எறிபந்தில் எனக்கு நான்தான் "ரோல் மாடல்". எனது பலங்களை மேலும் கூர்தீட்டிக்கொள்ள விரும்புகிறேன். ஆட்டத்தின்போது செய்யும் தவறும், பலவீனங்களை பயிற்சியாளரிடம் உடனுக்குடன் கேட்டு அவற்றைக் களைய முயல்கிறேன்.

ஓவியம் தீட்டுவது, பாடுவது, மேற்கத்திய நடனம் ஆடுவது ஆகியவற்றிலும் எனக்கு ஆர்வமும், திறமையும் உண்டு. தேசிய எறிபந்து போட்டிகளின்போது நடைபெறும் கலாச்சாரப் போட்டிகளின்போது உடனே தயாராகி இவற்றில் கலக்குவேன்.

ஆனால் எனக்கு உயிர் என்றால் எறிபந்துதான். சில பேர் இல்லாவிட்டால் எறிபந்து விளையாட்டில் என்னால் இந்தளவு சாதித்திருக்க முடியாது. அவர்கள், தமிழக எறிபந்து சங்கத்தின் தலைவர் ஐ.பி.எஸ். அதிகாரி சி.சைலேந்திர பாபு, பொதுச் செயலாளர் டி.பாலவிநாயகம், பயிற்சியாளர் பி.விநாயகம், எங்கள் பள்ளித் தலைமையாசிரியை பத்மினி ஸ்ரீராமன், உதவித் தலைமையாசிரியர் காசி விஸ்வநாதன், உடற்கல்வி இயக்குனர் ஏ. பிரபாகர் ஆகியோர்.

அப்புறம்... ஆமாம், எனது பெற்றோர். எனக்காகவே இவ்விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ள எங்கப்பா ஜெயக்குமார், அம்மா வினிதாவுடன், அக்கா அனிஷாவும் நான் சோர்ந்து போய்விடாமல் தாங்கிப் பிடித்து வருகிறார்கள்.

எறிபந்தில் மேலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும், இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்புப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஐ.ஏ.எஸ். ஆகும் இலட்சியமும் உண்டு!"

எறிபந்து ஆட்ட வேகத்திலேயே பேசி முடித்த விஷாகா, பந்தை எடுத்துக்கொண்டு பயிற்சிக்காக களத்தை நோக்கி வீறுநடை போட்டார்.


சாதனைப் பெண்கள்