கலிலியோ கலிலீ (1564 - 1642)

Galileo Galilei கலிலியோ கலிலீ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி, வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்தமைக்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பீசா நகரில் 1564 இல் பிறந்தார். இளமையில் பீசாப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். ஆனால், பணவசதிக் குறைவினால் பாதியிலேயே படிப்பை விட்டார். எனினும் அதே பல்கலைக் கழகத்தில் 1589 இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவா பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின் போதுதான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.

இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது எந்திரவியல் தொடர்புடையதாகும். இலோசான பொருள்களைவிடக் கனமான பொருள்கள் வேகமாகக் கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். இந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றினை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பி வந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார். பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்று குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள் இலேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில் தான் (Velocity) கீழே விழுகின்றன என்று அவர் கூறினார். (இதற்கான பரிசோதனைகளை பீசா சாய்கோபுரத்தின் உச்சியிலிருந்து பொருள்களைப் போட்டு கலிலியோ செய்து பார்த்தார் என்று கூறுவர். ஆனால், இந்தக் கூற்றுக்கு ஆதாரமில்லை).

இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர், கீழே விழுகின்ற ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருமடி வர்க்கத்திற்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்துவது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.

சடத்துவ விதியை (Law of Inertia) இவர் கண்டு பிடித்தது மற்றொரு அரிய சாதனையாகும். இதற்கு முன்பு, இயங்கும் பொருள்களின் வேகம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து, அதனை மற்றொரு விசையினால் மீண்டும் முடுக்கி இயங்காவிடில், இயக்கமின்றி நின்று விடும் என்று மக்கள் நம்பி வந்தார்கள். இந்தப் பொதுவான நம்பிக்கையும் தவறானது என்று கலிலியோவின் பரிசோதனைகள் காட்டின. "உராய்தல் போன்ற வேகத்தைக் குறைக்கும் விசைகளை அடியோடு நீக்கி விட முடியுமாயின், இயங்கும் ஒரு பொருள் இடைவிடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்" என்று அவர் கூறினார். இந்த முக்கியமான விதியை நியூட்டன் மீண்டும் தெளிவாக வலியுறுத்தினார். அத்துடன் தமது இயக்க விதிகளில் முதலாவது விதியாகவும் அமைத்துக் கொண்டார். இந்த விதி இயற்பியலில் இன்றியமையாத விதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

வானியல் துறையில் கலிலியோ செய்த கண்டுபிடிப்புகள் தாம் அவருடைய சாதனைகளில் தலையானவை ஆகும். 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வானியல் கோட்பாடுகள் பெருங்குழப்பத்தில் இருந்தன. கோப்பர்னிக்கசின் சூரிய மையக் கோட்பாட்டு ஆதரவாளர்களும், புவி மையக் கோட்பாட்டாளர்களுக்குமிடையே பெருஞ் சர்ச்சை நிகழ்ந்து வந்தது. கோப்பர்னிக்கசின் கோட்பாடு தான் சரியானது என்று 1604 இலேயே கலிலியோ அறிவித்திருந்தார். ஆனால், அப்போது தமது அந்த நம்பிக்கையை மெய்ப்பிப்பதற்கான முறை எதையும் அவர் கண்டுபிடிக்கவில்லை. எனினும், 1609 ஆம் ஆண்டில் ஹாலந்தில் தொலை நோக்காடி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கலிலியோ கேள்விப்பட்டார். அந்தத் தொலை நோக்காடி பற்றி முழு விவரங்கள் கிடைக்காத போதிலும், கலிலியோ தமது சொந்த திறமையினால் அதைவிட மிக உயர்ந்த திறன் வாய்ந்த தொலை நோக்காடியை அவர் தயாரித்தார். இந்தப் புதிய கருவியின் துணையுடன் அவர் வானியல் ஆராய்ச்சித் திறனை வானுயர உயர்த்தி விட்டார் எனலாம். ஒரே ஆண்டில் தொடர்ச்சியாக பல பெரிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார்.

அவர் சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ந்தார். அந்த மேற்பரப்பு சமதளமானதன்று என்பதைக் கண்டார். சந்திரனின் மேற்பரப்பில் ஏராளமான பள்ளங்களும், உயர்ந்த மலைகளும் இருக்கின்றன என்பதை அறிவித்தார். விண்வெளிப் பொருள்கள் வழவழப்பானவையோ வடுவற்றவையோ அல்ல என்றும், பூமியிலிருந்து நோக்கும் போது, அவற்றில் பல செவ்வொழுங்கின்மைகள் காணப்படுகின்றன என்றும் அவர் முடிவு செய்தார். வானகப் பால்வீதி மண்டலத்தை (Milky Way) ஆராய்ந்து, அது மேகம் போன்ற தன்மையுடையது அன்று என்பதையும், மிகத் தொலைத் தூரத்திலிருப்பதால் நம் கண்ணுக்குப் புகை மண்டலம் போல் தோற்றமளிக்கும் கோடிக் கணக்கான தனித்தனி விண்மீன்களின் கூட்டம் அது என்பதையும் அவர் கண்டறிந்தார். அவர் கோளங்களையும் ஆராய்ந்தார். சனிக்கோளத்தை வளையங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதைக் கண்டார். வியாழக் கோளை நான்கு சந்திரன்கள் சுற்றி வருகின்றன என்பதையும் கண்டு பிடித்தார். இதன் மூலம் பூமி அல்லாத வேறொரு கோளத்தையும் ஒரு கோளம் சுற்றி வரலாம் என்பதை அவர் தெளிவு படுத்தினார். அவர் சூரியனையும் ஆராய்ந்து, அதில் சூரியக் களங்கள்கள் (Sunspots) இருப்பதைக் கண்டறிந்தார். (இவருக்கு முன்னரே வேறு சிலர் சூரிய களங்கள் பற்றி தமது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு, அறிவியல் உலகின் கவனத்திற்குச் சூரிய களங்கங்களைக் கொண்டு வந்தார்.) சந்திரனைப் போலவே சுக்கிரன் கோளுக்கும் வளர்பிறையும், தேய்பிறையும் உண்டு என்று கண்டுபிடித்தார். பூமியும் மற்றக் கோளங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற கோப்பர்னிக்கசின் கோட்பாட்டுக்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்தது.

தொலைநோக்காடியைக் கண்டுபிடித்தும், அதன் பலனாக அவர் செய்த பற்பல கண்டுபிடிப்புகளும், கலிலீயோவுக்கு உலகப் புகழ் ஈட்டித் தந்தன. ஆனால், கோப்பர்னிக்கசின் கோட்பாட்டை ஆதரித்ததன் மூலம் அவருக்கு திருச்சபை வட்டாரங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோப்பர்னிக்கசின் கோட்பாட்டினைப் போதிக்கக் கூடாதென இவருக்கு 1616இல் தடை விதிக்கப்பட்டது. இவர் பல ஆண்டுகள் இந்தத் தடையினால் குமுறிக் கொண்டிருந்தார். 1623 இல் போப்பாண்டவர் இறந்தார். அவருக்குப் பின்னர் போப்பாண்டவராகப் பதவிக்கு வந்தவர் கலிலியோவை வியந்து பாராட்டுவார். எனவே, 1624இல் புதிய போப்பாண்டவர் எட்டாம் அர்பன் கலிலியோவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார்.

அடுத்த சில ஆண்டுகளில் தமது மிகச்சிறந்த நூலை எழுதுவதில் கலிலியோ ஈடுபட்டார். " தலையாய இரு உலக மண்டலங்கள் பற்றிய உரையாடல்" என்ற நூலே அது. கோப்பர்னிக்கசின் கோட்பாட்டினை இந்நூல் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கியது. இந்த நூல் 1632இல் திருச்சபைத் தணிக்கையாளர்களின் இசைவுரிமையுடன் வெளியிடப்பட்டது. ஆனால் இந்நூல் வெளியான போது திருச்சபை அதிகாரிகள் சீற்றங்கொண்டனர். 1616ஆம் ஆண்டுத் திருச்சபைத் தடையை மீறியதற்காக ரோமில் இவர் மீது விசாரணை நடந்தது.

தலைசிறந்த விஞ்ஞானி கலிலியோ மீது குற்றஞ்சாட்டி விசாரணை செய்வதென்ற முடிவை திருச்சபையாளர்களில் பலர் விரும்பவில்லை. இவருக்கு எதிரான வழக்கு ஐயப்பாட்டிற்குரியதாக இருந்தது. எனவே, இவருக்கு இலேசான தண்டனையே விதிக்கப்பட்டது. இவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆர்செட்ரியிலிருந்த இவரது வசதியான மாளிகையிலேயே இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்தக் தண்டனையின் படி, பார்வையாளர்களை இவர் பார்க்கக் கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதி செயற்படுத்தப்படவில்லை. "சூரியனைப் பூமி சுற்றி வரவில்லை" என்று இவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பது இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மற்றொரு நிபந்தனை. 69 வயதான கலிலியோ பகிரங்க நீதிமன்றத்தில் அவ்வாறு அறிவித்தார். (ஆனால், அவ்வாறு அறிவித்த மறுகணமே இவர் பூமியைப் பார்த்துக் கொண்டே "இன்னும் இந்தப் பூமி சூரியனைத் தான் சுற்றி வருகிறது" என்று மெல்லிய குரலில் கூறியதாகக் கூறுவர். ஆர்செட்ரியிலிருந்து கொண்டு கலிலியோ தொடர்ந்து எந்திரவியல் பற்றி நூல்கள் எழுதி வந்தார். அங்கு அவர் 1642 இல் காலமானார்.

அறிவியல் முன்னேற்றத்திற்கு கலிலியோ ஆற்றிய அளப்பரிய தொண்டு நெடுங்காலத்திற்கு முன்பே போற்றுதலைப் பெற்றது. சடத்துவ விதி, தொலை நோக்காடி கண்டுப்பிடிப்பு, அவரது வானியல் ஆராய்ச்சிகள், கோப்பர்னிக்கஸ் கோட்பாட்டினை இவர் மெய்ப்பித்தது ஆகிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இவருக்கு ஓரளவுக்குத் தான் புகழ் தேடித் தந்தன. அறிவியல் முறைமையியலை (Methodology) உருவாக்குவதில் இவர் ஆற்றிய சாதனைகள் இவருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்தது. இவருக்கு முந்திய இயற்கைத் தத்துவஞானிகளில் பெரும்பாலானோர் அரிஸ்டாட்டிலிடமிருந்து வழிகாட்டும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு, தனியியல்பு வாய்ந்த கொள்கைகளையும், வகைப்படுத்திய கருதுகோள்களையும் வகுத்தார்கள். ஆனால், கலிலியோ நிகழ்வுகளை அளவீடு செய்தார்; அளவு சார்ந்த ஆராய்ச்சிகளைச் செய்தார். இந்த அளவு சார்ந்த ஆராய்ச்சிகள் தாம் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படை அம்சமாக ஆயிற்று.

அறிவியல் ஆராய்ச்சியில் செயல் முறை அணுகுமுறையைக் கையாள்வதில் வேறொருவரையும் விடக் கலிலியோ மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டார். பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டிய அவசியத்தை முதலில் வலியுறுத்திக் கூறியவர் கலிலியோ தான். அதிகாரிகளின் ஆணையை - அது திருச்சபையினுடையதாயினும் அரிஸ்டாட்டிலின் கருத்துகளாயினும் - கண்மூடித்தனமாக நம்புவதன் மூலம் அறிவியல் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிட முடியும் என்ற கொள்கையை இவர் ஏற்க மறுத்தார். பரிசோதனையின் வலுவான அடித்தளத்தில் அமையாத அனுமானங்களையும் அவர் ஏற்கவில்லை. மத்தியகால அறிஞர்கள் என்ன நிகழ வேண்டும், ஏன் நிகழ்வுகள் நிகழ்கின்றன என்பதைத்தான் ஆராய்ந்தார்கள். ஆனால், உள்ளபடிக்கு என்ன நிகழ்கிறது என்பதை தீர்மானிக்கப் பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்பதை கலிலியோ வலியுறுத்தினார். அவருடைய அறிவியல் நோக்கு, ஆன்ம ஞானம் சாராததாக இருந்தது. விஞ்ஞானிகளை விடவும் இவர் நவீன நோக்குடையவடராக இருந்தார்.

தலைசிறந்த அறிவியல்வாதியாக விளங்கிய கலிலியோ ஆழ்ந்த சமயப் பற்றுடையவராகவும் திகழ்ந்தார். திருச்சபையினர் இவர் மீது வழக்குத் தொடர்ந்து, தண்டனை விதித்த போதிலும், இவர் சமயத்தையோ, திருச்சபையையோ எதிர்க்கவில்லை. அறிவியல் ஆராய்ச்சிகளை ஒடுக்குவதற்குத் திருச்சபையினர் செய்த முயற்€சிகளை மட்டுமே கண்டித்தார். ஒருதலையான பிடிவாதக் கொள்கைக்கும், சிந்தனைச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளுக்கும் எதிரான புரட்சியின் சின்னமாகப் பின் வந்த தலைமுறையினர் இவரைப் போற்றுவதற்கு இவர் முற்றிலும் தகுதியுடையவராக விளங்கினார். நவீன அறிவியல் முறையை நிறுவுவதில் இவர் ஆற்றிய அரும்பணி மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link