தாமஸ் ஆல்வா எடிசன் (1847-1931)

Thomas Alva Edison

பலதுறைப் புலமை வாய்ந்த புத்தமைப்பாளராக விளங்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்திலுள்ள மிலான் நகரில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் மூன்று மாதங்கள் மட்டும் முறையாக கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியர் இவரை மூளை வளர்ச்சி குன்றியவர் என்று கருதினார்.

எடிசன் கண்டுபிடித்த முதல் சாதனம் ஒரு மின்வாக்குப் பதிவுக் கருவி (Electric Vote Recorder) ஆகும். இதனை இவர் தமது 21 ஆம் வயதிலேயே கண்டுபிடித்தார். ஆனால், இக்கருவி விற்பனையாகவில்லை. அதன் பின்பு இவர் எளிதில் விற்பனையாகக் கூடிய கருவிகளைக் கண்டு பிடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். வாக்குப் பதிவுக் கருவியைக் கண்டுபிடித்த பிறகு மிக விரைவிலேயே சீர்திருந்திய "இருப்புக் கணக்குக் குறியீட்டு முறை" (Stock Ticket System) ஒன்றைக் கண்டுபிடித்தார். இதனை அவர் 40,000 டாலருக்கு விற்பனை செய்தார். இது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகையாகும். தொடர்ந்து அடுத்தடுத்து பல புதிய கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவற்றின் மூலம் எடிசன் விரைவிலேயே பெருஞ் செல்வமும் புகழும் ஈட்டினார். இவர் கண்டுபிடித்த சாதனங்களில் சாதனங்களில் மிகச் சிறந்தது "ஒலிப் பதிவு முறை இசைப் பெட்டி" (Phonograph) ஆகும். இதற்கு இவர் 1877 ஆம் ஆண்டில் புத்தாக்க உரிமை பெற்றார். ஆனால், இதைவிட உலகுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது இவர் கண்டுபிடித்த வெண்சுடர் ஒளி வீசி எரிகிற விளக்குக் குமிழ் (Incandescent Light Bulb) ஆகும். இதை இவர் 1879 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

மின் விளக்கு முறையினை முதலில் கண்டுபிடித்தவர் எடிசன் அன்று. சில ஆண்டுகளுக்கு முன்பே மின்சுடர் விளக்குகள் (Electric Arc Lamps) மூலமாகப் பாரிஸ் நகரில் தெருக்களுக்கு விளக்கு வசதி செய்யப்பட்டது. ஆனால், எடிசனின் மின் குமிழும், அவர் கண்டுபிடித்த மின்விசை வழங்கீட்டு முறையும், நடைமுறையில் வீடுகளில் மின் விளக்கைப் பயன்படுத்துவதற்கு வழி செய்தன. இவர் தொடங்கின நிறுமம் 1882 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் வீடுகளுக்கு வழங்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதன் பின்பு இல்லங்களில் மிக விரைவாகப் பரவியது.

தனியார் இல்லங்களுக்கு மின்விசையைக் கொண்டு செல்வதற்கான முதலாவது வழங்கீட்டு நிறுமத்தை நிறுவிய தன் வாயிலாக ஒரு மாபெரும் தொழிலின் வளர்ச்சிக்கு எடிசன் அடித்தளம் அமைத்தார். இன்று, இந்த மின் விசையைப் பயன்படுத்துவது மின்விளக்கு மட்டுமன்று, தொலைக்காட்சி முதல் சலவை எந்திரம் வரையில் ஏராளமான வீட்டுச் சாதனங்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. மேலும், எடிசன் நிறுவிய மின் வழங்கீட்டு இணை வனத்திலிருந்து (Distri bution Network) மின் விசை கிடைத்ததன் காரணமாக, தொழில் துறையினர் மின்சாரத்தைப் பயன்படுத்துவது பெருமளவுக்கு ஊக்குவிக்கப்பட்டது.

திரைப்பட ஒளிப்படக்கருவிகள் (Motion Picture Cameras) திரைப்பட ஒளிருருப் படிவக் கருவிகள் (Projectors) ஆகியவற்றை மேம்படுத்துவதில் எடிசன் மிகப் பெரிய பங்கு பெற்றார். தொலைபேசியில் இவர் முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்தார். (தொலைபேசியில் கார்பனை ஒளிபரப்பீட்டுக் கருவியாக இவர் பயன்படுத்தியதன் மூலம், கேட்கும் ஓசை அதிகத் தெளிவாக இருந்தது. தந்திப் பொறி (Telegraph), தட்டச்சுப் பொறி (Typewriter) ஆகியவற்றில் இவர் சிறப்பான மாறுதல்களைச் செய்தார். உரைப்பதிவுப் பொறி (Dictating Machine) படியெடுப்புப் பொறி (Mimeograph Machine), சேமக் கலம் (Storage Battery) ஆகியவை இவர் கண்டுபிடித்த மற்றச் சாதனங்களாகும். மொத்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப் புத்தமைப்புகளுக்கு இவர் புத்தாக்க உரிமை பெற்றார். இது உண்மையிலேயே வியப்பூட்டும் எண்ணிக்கையாகும்.

எடிசன் இவ்வாறு அதிசயிக்கத்தக்க வகையில் புத்தாக்கத் திறன் வாய்ந்தவராக விளங்கியதற்கு, அவர் தமது தொழில் வாழ்வின் தொடக்கத்திலேயே நியூஜெர்சி மாநிலத்திலுள்ள மென்லோ பார்க் என்னுமிடத்தில் ஒரே ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவியது ஒரு முக்கிய காரணம் எனலாம். இந்த ஆய்வுக் கூடத்தில் தமக்கு உதவி புரிவதற்காக இவர் திறமை வாய்ந்த உதவியாளர்களை நியமித்திருந்தார். பல தொழில் நிறுவகங்கள் நிறுவியுள்ள பெரிய ஆய்வுக் கூடங்களுக்கு இந்த ஆராய்ச்சிக் கூடம் ஒரு முன் மாதிரியாக அமைந்தது. தேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து பணியாற்றக்கூடிய, அனைத்துக் கருவிகளையும் கொண்ட நவீன ஆராய்ச்சிக் கூடத்தை எடிசன் அமைத்தது அவருடைய மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் புத்தாக்க உரிமை பெற்றிருக்க முடியாது.

எடிசன் ஒரு புத்தமைப்பாளராக மட்டும் இருக்கவில்லை. அவர் உற்பத்தித் தொழிலிலும் ஈடுபட்டார். ஏராளமான தொழில் நிறுமங்களை அமைத்தார். இந்த நிறுமங்களில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்கியது பொதுமின் நிறுமம் (General Electric Company) ஆகும்.

எடிசன், மனப்பாங்கின்படி ஒரு துறை குறை தீர்த்த விஞ்ஞானியாக இருக்கவில்லை. எனினும், அவர் 1882 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பைச் செய்தார். "காற்றில்லாத வெற்றிடத்தில், இரு கம்பிகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிராத போதிலும், அந்தக் கம்பிகளுக்கிடையே ஒரு மின்னோட்டத்தைப் பாயும்படி செய்யலாம்" (Edision Effect) என அழைக்கப் படுகிறது. இந்த விளைவு, முக்கியமான கோட்பாட்டுக்கு கருத்தாக மட்டும் அமையாமல், நடைமுறையில் பெருமளவுக்குப் பயன்படக்கூடியதாக அமைந்தது. இந்த விளைவின் அடிப்படையில் விரைவிலேயே "வெற்றிடக் குழல்" (Vacum Tube) உருவாக்கப்பட்டது. அத்துடன், மின்னியல் தொழில் (Electronics Industry) தோன்றுவதற்கும் இது வழி வகுத்தது.

எடிசனின் வாழ்நாளில் பெரும்பகுதியில் அவருடைய கேட்குந் திறன் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமது வியக்கத்தக்க கடும் உழைப்பின் மூலம் அவர் அந்தக் குறைபாட்டை ஈடுசெய்து கொண்டார். எடிசனின் முதல் மனைவி இளமையிலேயே இறந்து விட்டார். அவர் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர் மறுமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. நியூஜெர்சி மாநிலத்தில் வெஸ்ட் ஆரஞ்சு என்னுமிடத்தில் 1931 ஆம் ஆண்டில் எடிசன் காலமானார்.

எடிசனின் திறமை குறித்து எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமேயில்லை. உலகில் முன்பு எப்போதும் தோன்றியிராத மாபெரும் புத்தமைப்பாக்க மேதை அவர் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். அவரது கண்டு பிடிப்புகளில் பெரும்பாலானவை மற்றவர்களால் 30 ஆண்டுகளுக்குள்ளாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற போதிலும், அவர் கண்டுபிடித்த பயனுள்ள கண்டு பிடிப்புகளின் எண்ணிக்கை உண்மையிலேயே மலைப்பூட்டுகிறது. எனினும், அவருடைய கண்டுபிடிப்புகளைத் தனித்தனியாக நோக்கும்போது, அவற்றுள் எதுவும் உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றாது. உதாரணமாக, வெண்சுடர் ஒளிவீசி எரிகிற விளக்குக் குமிழ் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட போதிலும், நவீன வாழ்வில் ஈடுசெய்ய முடியாததாக இல்லை. உண்மையைக் கூறின், முற்றிலும் வேறுபட்ட அறிவியல் தத்துவத்தில் அடிப்படையில் செயற்படும் உமிழொளி விளக்குக் குமிழ்கள் (Flouresent Light Bulbs) இன்று மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வெண்சுடர் ஒளிவீசும் விளக்குக் குமிழ் இல்லாது போனால் கூட நாம் பாதிக்கப்பட போவதில்லை. மின் விளக்குகள் பயனுக்கு வராதிருந்த காலத்திலுங்கூட, மெழுகுவர்த்திகளும், எண்ணெய் விளக்குகளும், ஆவி விளக்குகளும் பொதுவாக மன நிறைவளிக்கத்தக்க ஒளி ஆதாரங்களாகக் கருதப்பட்டு வந்தன.

ஒலிப்பதிவு இசைப்பெட்டி ஒரு புதுமையான சாதனம் என்பது உண்மையே. எனினும், அது வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றைப் போன்ற நமது அன்றாட வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறமுடியாது. மேலும், அண்மை ஆண்டுகளில் ஒலியைப் பதிவு செய்வதற்காகக் காந்த நாடா ஒலிப்பதிவுக் கருவி (Magnetic Tape Recorder) போன்ற முற்றிலும் வேறுபட்ட முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று ஒலிப்பதிவு இசைப் பெட்டியோ இசைத் தட்டு இயக்கு கருவியோ (Record Player) இல்லாவிட்டாலுங்கூட, ஒரு வேறுபாடும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எடிசன் பெற்ற புத்தாக்க உரிமைகளில் பல, மற்றவர்கள் ஏற்கனவே கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டு வந்த கருவிகளில் சீர்திருத்தங்கள் செய்து பெற்றவையாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் உதவியாக இருந்தபோதிலும், வரலாற்றில் புரட்சிகரமான மாறுதல் உண்டாக்கும் அளவுக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.

ஆனால், எடிசனின் கண்டுபிடிப்புகளில் எந்த ஒரு தனிக் கண்டுபிடிப்பும் அளப்பரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லையென்ற போதிலும், அவர் ஒரேயொரு கண்டுபிடிப்பை மட்டும் செய்ததுடன் நின்று விடாமல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்தார் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தக் காரணத்திற்காகவே குக்ளியல்மோ மார்கோனி, அலெக்சாண்டர் கிரகாம் பெல் போன்ற புகழ் பெற்ற புத்தமைப்பாளர்களுக்கு முன்னதாக எடிசனுக்கு இடமளித்திருக்கிறேன்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link