சிறுகதைகள்


விழிகள்

கூடல்.காம்

விழிகளுக்கு நான் அடிமையாக நேர்ந்த கதையை நினைத்துப் பார்க்கிறேன். நினைவுகளின் ஒரு பக்க நுனியெடுத்துப் பிடித்தபடி அதன் ஆரம்பம் தேட மெல்ல நகர்கிறேன்.

என் நகர்தலில், என் பாவாடைச் சட்டைப் பருவம் வந்து நிழலாட அந்த குறுகலான சந்தில் நெருக்கலான வீடுகள், உயரம் குறைவான நிலைப்படிகள். மாலை நேர மஞ்சள் வெயில், தன் பங்குங்கு வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்களோடு போட்டி போட்டுக் கொண்டு தன் கோலத்தைப் பூமிமேல் எழுதிக் கொண்டிருந்தது.

சந்தின் முடிவில் இருந்த தண்டவாளத்தில் இரயில் காற்றில் புகைக் கோலமிட்டபடி போய்க் கொண்டிருக்க குதியாட்டமும் கையாட்டலுமாக சந்தோசத்தில் திளைத்திருந்த பிள்ளைகள் கூட்டம். கருவேலஞ் செடிகளும், எருக்கலஞ்செடிகளும் நிறைந்திருக்க, கருவேலஞ் செடிகளின் இலைகள் சமைப்பதாய்ப் பாவனை செய்து கொண்டிருந்த பெண் குழந்தைகள். எருக்கலஞ் செடியில் பட்டுப் புழுக்களை தேடிச் சேகரித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கூட்டம்.

எல்லாம் தாண்டி ஈரமாயிருந்த தெருவில், பாவாடை நனையாது நான் தூக்கிச் செருகிக் கொண்டு நடந்த அந்த மஞ்சள் வெயில் மாலை வேளை நினைவில் வந்து போனது. எழுபது வயது ஆச்சியும் நானும். வயது தன் வருகையை அவர் கைகளில் செதுக்கியிருந்த சுருங்கிய தோலை நிமிண்டிக் கொண்டே என் கேள்வி

"எங்கே ஆச்சி போறோம்?"

"இங்கே ஒரு பெரியாச்சி இருக்காங்கடா. எனக்கு அக்கா. அவங்களை பார்க்கப் போகிறோம்"

"உங்களுக்கு அக்கா இருக்காங்களா? தங்கச்சி, தம்பி எல்லாம் இருக்காங்களா ஆச்சி?"

"இருந்தாங்கடா! ஒரு தம்பி, தங்கச்சி. இப்ப இல்லை இறந்துட்டாங்க. அக்கா மட்டும்தானிருக்காங்க".

வாழ்வைப் போல் எங்கே குறுகும், திரும்பும் என்றறியா தெருவில் போய்க் கொண்டே இருக்கப் பெரிய பழைய மரக்கதவொன்றின் அருகில் வந்து நின்றோம்.

"பூவேய் மல்லி, முல்லை" என்று தெருவில் வித்துக் கொண்டு போக எங்கிருந்தோ ஒரு குரல்

"எனக்கும் பூவு?"

குரல் வரும் திசைதேடி, அது என்னால் அனுமானிக்க முடியாததாய் அதே நேரம் யாருமே அந்தக் குரலை, பூக்காரி முதற்கொண்டு கண்டு கொள்ளவில்லை என்பதுமெனை யோசிக்க வைக்க, திரும்பித் திரும்பி நான் தேட, நாங்கள் நின்றிருந்த வாசலின் கதவடியில் ஒரு துளை இருக்க அதில் கண் ஒன்று முளைத்திருந்தது. இங்கிருப்போர் எல்லாருக்கும் மிகப் பழக்கமாயிருந்த குரல் போலும் அது.

குழந்தைகள் தங்கள் விளையாட்டில் மூடிய கண்களோடு கோடுகளை மிதிக்காது, சில்லாக்குகளை மிதிக்க நகண்டு கொண்டிருந்தார்கள். பையன்களோ சிமெண்ட் பாலங்களுக்கிடையில் கிட்டிப்புள் வைக்கத் தோண்டியிருந்தார்கள். கிட்டிப் புள்கள் தாக்குமோ என்ற பயத்தில் அந்த வழியாக வந்த யாவரும் யோசித்தபடி நடக்க, யார் காதிலும் விழாத அந்தக் குரல் எனக்கு மட்டும் மிகத் துல்லியமாகக் கேட்டது. பேசியது கண்கள் என நான் உணர்ந்ததாலா?

கண் பேசியது, "நான் காசு தரேன் பூ வாங்கிக் கொடு" இமைக்கும் கண்கள் பேசியதாய் தோற்றம் தர, கண்கள் பேசுகிறது என்கிற எண்ணத்திலிருந்து நான் மீளவே முடியாது தவித்துக் கொண்டிருக்க, ஓட்டை வழியாக இரு விரல்கள், விரல்களுக்கு நடுவில் செல்லாமல் போயிருந்த அலுமினிய மூன்று பைசா காசொன்று.

இந்த உலகிலிருந்து அந்தப் பேசிய விழிகள் அந்நியப் பட்டிருக்கும் கால இடைவெளியைக் காட்டி நிற்க,

"இந்தா எனக்குக் கொஞ்சம் பூ வாங்கிக் கொடு."

"பொறு! கதவு திறக்க குமார் வரட்டும். வாங்கலாம்"

அதட்டலா? இல்லையா? என்று தீர்மானிக்க முடியாதவாறு ஆச்சியிடமிருந்து பதில் வர, விளையாடிக் கொண்டிருந்த எதிர் வீட்டுப் பிள்ளைகள் இவ்வுலகு மறந்து தன்னுலகில் நிலைத்திருக்க, அவர்களில் ஒரு பெண்ணை அழைத்தார் ஆச்சி,

"பாப்பா, குமார் அண்ணாச்சியைப் போய்க் கூப்பிட்டு வர்றியாப்பா? ஒரு ஆச்சி வந்திருக்கேன்னு போய்ச் சொல்லு."

"சரி பாட்டி" சொல்லி விட்டு ஓடினாள்.

வாசலில் காலாட்டியபடி விளையாடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமாவைக் கூப்பிடப் போன பிள்ளையால் விடுபட்ட இடம் எவ்வளவு விரைவாக நிரப்பப்பட்டுவிட்டது.

"பொரிகடலை வாங்கிக்கொடேன்"

மெல்லப் பயம் நீங்கி விழிகளை ஏறிட்டேன். புருவம் அற்ற விழிகள் விழிகளுக்கு முன்னால் அந்ந மூணு பைசா நாணயம் நின்று கொண்டிருந்தது, விழிகளின் மொழி, இல்லை.. விழியின் மொழி புரிய ஆரம்பித்த முதல் தருணம் இதுதான். ஆம் இப்போ பேசிக் கொண்டிருந்தது விழிதான். அந்த விழி ஒருமுழு மனிதமாகவே காட்சி தந்து கொண்டிருந்தது ஆச்சர்யம் தந்தது.

விழி பேசியது, என் பேச்சுக்கேட்டது; விழிகளுக்கு விழி நீட்டிக் காசு தந்தது, விழியாலேயே பெற்றுக் கொள்ள விழைய, விழி பார்க்க மட்டும் முடியும் என்பது போய் எல்லாமாகி இருந்த விழி.

குமார் என்றழைக்கப்பட்ட மாமா வந்து கதவைத் திறக்க அதிர்ச்சி காத்திருந்தது. விழியையே ஒரு ஜீவனாக அதுவரை தரிசித்திருந்த என் விழிகள் உள்ளிருந்த உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்தது, எலும்பும் தோலுமாக, ஆம்! உடைகள் ஏதுமின்றி, அதற்கான உணர்வுகள் ஏதுமின்றி இதுவரை பேசிய விழிகளுக்கும், விழிதனின் இளமைக்கும் சம்பந்தமில்லாத உருவம் முதன் முறையாக ஒரு மனிதரை ஆடையின்றிப் பார்த்த அதிர்ச்சி மனதுக்குள் பாய்ந்திருக்க, உறைந்திருந்தேன் நான் வாசலோடு.

உள்ளே சென்றிருந்த மாமாவும், ஆச்சியும் எல்லாம் சகஜமாக எடுத்தபடி உள்ளே போயிருக்க கொஞ்ச நேரம் முன் வரை நான் பார்த்திருந்த இளமை விழிகளைத் தேடியபடிச் செய்வதறியாது நின்றிருந்தேன். மனிதனின் உயிர்ப்பு மொத்தமும் விழிகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்க, விழிகளில் எனக்கு காதல் பிறந்திருந்தது.

"உள்ளே வாம்மா"

மாமா அழைக்க, போவதா? வேண்டாமா? தரையோடு தரையாகக் கிடந்த உருவத்தைத் தாண்ட முடியுமா? பயம் பற்றிக் கொள்ள, அதற்குள் மாமா சேலை எடுத்து அவர் மேல் போட்டு மூட முயற்சிக்க, ஒரு மகன் அந்த நிமிடம் தாயாகி நின்றதும், தாய் குழந்தையானதும், உறவுகளை நாம் என்ன தான் தீர்மானித்து வைத்திருந்தாலும், நம்மிடையே இருக்கும் மனிதன் தீர்மானித்து வைத்திருந்தவைகளைச் சிதைக்கக் கூடியவை. அந்தச் சிதைவுகளும் கூட சுகமானவை.

"என்ன சித்தி செய்ய எத்தனை செய்தாலும் மேலுக்கு அவங்க ஒண்ணும் போட்டுக்கிறதில்லை."

சொல்லி முடித்த வினாடிகளில் எறியப்பட்ட சேலை மாமா முகத்தில் வீழ்ந்து கைகளில் வழிய,

"அக்கா பலகாரம் சாப்பிடுக்கா."

ஆச்சி அன்போடு உபசரிக்க அதை அவுங்க வாங்குகின்ற இடைவெளியில் நான் விலகி ஆச்சியிடம் போய்ச்சேர எத்தனிக்க என் இடம் பெயரல் அவருக்குள் என்ன செய்ததோ தெரியலை, என்ன நடக்குதுன்னு நான் யோசிக்குமுன் தூரப்போய் விழுந்தேன். என் கண்களுக்கருகில் பாதவிரல்கள். ஒரு நிமிட யோசனையில் தான் நான் எங்கிருக்கிறேன் என்று புலப்பட்டது,

அடுத்து யோசித்தேன் என்ன நடந்தது? மாமா தூக்கி விட முயல, ஆச்சி "அடி பட்டிருச்சாப்பா" எனக் கேட்க, மனதுக்குள் நடந்தது ஓடியது.

நான் உள்ளே வர முயலவும் பெரிய ஆச்சி எத்திவிட விழுந்திருக்கிறேன். கால்களுக்குள் பயங்களோடும் பிரமிப்போடும் கொஞ்சம் முன் வரை கைகளாகவும், வாயாகவும் இருந்திருந்த விழிகளை நிமிர்ந்து பார்த்தேன். பார்வையின் வலு எனக்கு விழுந்த உதையின் வலியில் தெரிந்தது. விழிகளை எடுத்து முதல் முறையாகக் கைகள் நீண்டன.

"இந்தா பலகாரம் சாப்பிடு"

வாங்க நெருங்கப் பயந்த எனைப் பார்த்து விட்டு

"நான் எத்துன பிள்ளைக்குக் கொடு".

அதட்டலோடு நீட்டப்பட்ட பலகாரம். நடுங்கிய விரல்களோடு வாங்கியதை வாயில் போடத் தோன்றாது விரல்களுக்குள் பத்திரப்படுத்த விரல்களின் பிசுபிசுப்பு.

"சரி, போலாமா சித்தி ?"

மாமா கேட்கக் கதவைத் தாளிட்டு வெளியே வர, கதவுக் கடியில் மீண்டும் விழிகள் எல்லாமுகமாய் மாறியிருந்தன. இது எனக்குள் நுழைந்த முதல் விழிகள்.

தொடர்ந்து என்னுள் விழிகள் பதித்த சுவடுகள், காலம் வந்து அலைகளாய் கழுவிச் செல்ல நினைத்தாலும் அழியாத தடங்களாய் ஆச்சியின் சுருங்கிய தோல்கள், கிள்ளக் கிடைத்த ஆசைகள் மறந்து போயிருக்க, மறக்காது நின்ற ஸ்பரிசங்கள் ஆச்சி, எங்கள் வீட்டுக்கு முன்புறம் நட்டு வைத்துவிட்டு போயிருந்த மாஞ்செடி கையூன்றி வேரூன்றி வருகின்ற மாசியில் மரம் தழைக்க மழை பெய்து விட்டால் சிம்போடு பூவும் விட்டு, கடந்து சென்ற காலங்களில் நமக்கென்று எஞ்சி நின்ற கனிகளைத் தந்து விட்டு போகக் கூடும்.

காற்றில் சலசலத்து மரம் சிரிக்க, என் கையிருந்த குடத்து நீர் சிரித்தபடி வேரில் விழுந்தது. எல்லாரும் ஒரு நாள் எனைப்போல் குடத்துள்ளிருந்து வெளியே வீழ்ந்து மண்ணில் கலந்து, வேரில் நுழைந்து, பூவாகி, மணமாகி, கனியாகி, ருசியாகி, ஏகாந்தமாக வேண்டுமென சொல்லிச் சிரிக்க, அந்த மூணு காசும், விழியும், மல்லிகைப் பூ கேட்கும் குரலும், மனசுக்குள் நின்று போக, காலங்கள் கரைகின்றன. ஆடித் திரிந்த காலங்கள் மறைந்து, பயந்தடங்கிய காலங்களும் மாறி பாதை தேடத் துவங்கும் பருவங்கள் வந்தன. இன்னமும் கருவேலஞ்செடிகளும் எருக்கஞ் செடிகளில் பட்டுக் கூடுகளும் மட்டும் மாறாது. கல்லூரி விடுதிகள் நோக்கிப் பறக்க ஆரம்பித்திருந்த காலமிது. அடுத்த வாரம் கிளம்புவதற்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அன்று வீட்டுக்கு வந்தார்.

உடல்தனில் குறைந்து போன கம்பீரம் குரல்தனில் நிலைத்திருந்தது. கூடத்திற்கும் வாராந்தாவிற்கும் இடையில் நின்றவர் அழைக்க நான் வேலையை போட்டு விட்டு யாரென்று பார்க்க வந்தேன். வேட்டி, சட்டை, நரை விழத் துவங்கியிருந்த வயது, யாரென்று தெரியவில்லை, இல்லை பார்த்திருக்கிறேன். நினைவு வரவில்லை. எட்டாத நினைவுகளோடு நானிருக்க,

"அம்மா இல்லையாடா!"

கேட்டபடி உள்ளே வந்தபடி சொன்னார்.

"நான் குமார் மாமாடா, அம்மா இருக்காங்களா?"

பொட்டில் அடித்த மாதிரி ஏதேதோக் குறிப்பாய் நினைவுக்கு வர,

"கூப்பிடுறேன் மாமா. உட்காருங்க"

இன்னமும் நினைவு வராதவளாக சம்பிரதாயமாக சொல்லிப் போனேன். பெயர் மட்டும் தெரியுமே என்று உணர்த்திக் கொண்டே இருக்க, தெளிந்திருந்த குட்டையின் அடியின் மூழ்கியிருந்த விசயங்கள் மேலெழும்பின. அவர் குரல் குழப்பியிருந்தது, இந்தக் குரல் நினைவுகளின் ஆழத்தின் நுனி எடுக்க முடியாது யோசனைகளோடு நடந்தேன். அம்மா பின் கட்டில் வேலையா இருக்க வேகமாகப் போகும் எண்ணம் மனதிருந்தும் கால் நடக்க மறுத்தது, நினைவுகளில் கனங்களோடு. மோதிக் கொண்டதுணர்ந்த போது தான் அம்மா இருக்குமிடம் வந்திருப்பது தெரிய,

"என்னம்மா? முழிச்சு கிட்டே வந்து மோதுற"

மேலும் கீழுமாய் அம்மா பார்க்க,

"குமார் மாமா வந்திருக்காரும்மா"

"இதோ வருகிறேன்"

அம்மாவிடம் ஒருவித அவசரம் தொற்றிக் கொள்ள, அரைத்திருந்த மசாலாவை அடுப்படியில் வைத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் வந்தாள் அம்மா.

"வாங்கண்ணா. நல்லாயிருக்கீங்களா?"

"நல்லாயிருக்கேம்மா"

"அண்ணி, பிள்ளைகள் எப்படி இருக்காங்க?"

"எல்லாம் நல்லா இருக்காங்க. இது நம்ம பாப்பாவாடா?"

எனைப் பார்த்துக் கேட்க நான் இன்னமும் எங்கு பார்த்திருக்கிறேன் அறிய முடியாது குழம்பியபடி.

"சே! அம்மாவிடம் யாருன்னு கேட்காம போனோமே, யோசனையோடு தண்ணி எடுத்து வந்து வைக்க,

"அண்ணிக்கு இப்பதான் அப்பாடான்னு இருக்கும்"

அம்மா சொல்ல, மாமா தண்ணி தம்ளருக்குள் தேடியபடி பேசினார்.

"ஆமா! அவளும் அலுத்துப் போயிட்டாள்ல, அம்மாவைக் கடைசி காலத்தில சமாளிப்பது கஷ்டமாயிட்டது"

ம்..ம்... இப்பதான் நினைவுக்கு வருது. ஆச்சியோட விரல் பிடித்துப் போன நினைவுகள் வந்து அலை மோதின.

பெரியாச்சி?

"அம்மாவுக்கு வருகிற ஞாயிறு சாமி கும்பிடறோம், வந்திடுங்க, மாப்பிள்ளை எங்கே சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்".

ஏதேதோ இருவரும் பேசி வருத்தப் பட்டார்கள், நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள், மகிழ்ந்தார்கள். எதுவுமே எனக்குள் நிற்காது விழி வந்து முன்னாடி நின்றது. ஞாயிறு எல்லாரும் பயணமானோம் ஆச்சி சாமி கும்பிடுதலுக்கு, மாமா வந்து சொல்லிப் போனதிலிருந்து மனசு கனத்துக் கிடந்தது.

ஏன் இப்படி ஆனது ஆச்சிக்கு? கேள்வி அரிக்க, அம்மாவிடம் கேட்டுப் பார்த்தேன். அம்மாவுக்குள் இதுவரைக்கும் அதுமாதிரி கேள்விகள் ஏன் இல்லாதிருந்தது? என்று, கூட ஒரு கேள்வியும் சேர்ந்து கொண்டது.

"எனக்குத் தெரியலைம்மா, எனக்கு விபரம் தெரிஞ்சதிலிருந்து இப்படித்தான் இருக்காங்க".

அம்மாவுக்கு அதற்கு மேல் ஆர்வமில்லை. பயணம் சீக்கிரம் முடிந்து போனது. எனக்குள் இருந்த கேள்வியின் நீளங்களால். ஆமாம் பயணம் என்றால் எப்போதும் உல்லாசமாய்க் கழியும் என் பொழுதுகள் இந்த முறை ஒரு வித அழுத்தங்களோடு பயணித்தது அழுத்தமான மௌனங்கள். இல்லை.. இல்லை... அது என்ன மௌனம். மனக் கேள்விகளின் பேரிரைச்சல் பதிலுரைக்க முடியாது திகைத்துக் கொண்டிருந்தேன். எல்லாரையும் போல ஏன் ஆச்சியால சந்தோசமா வாழ முடியலை? ஏன் வாழ முடியலை என்கிற கேள்விகள் ஏன் என் அம்மா போன்றவர்களுக்குள் எழும்பாமல் போனது?

"சே!" ஒரு கேள்விக்கும் பதில் தெரியலை. மனத்தில் ஒரு இயலாமை சூழ சன்னலில் பார்வை நிலைத்திருந்தது. முகத்தில் வீசும் காற்று முடியைக் கலைத்துப் போடக் கைகுட்டை எடுத்து முடிகளை ஒன்று சேர்த்துக்கட்டினேன்.

தூங்கியிருப்பேனோ?

விழிப்பு வந்த போதுதான் தூங்கியிருந்தது தெரிந்தது. ஊர் வந்து சேர்ந்திருந்தோம். பேருந்து நிலையத்திற்குரிய இரைச்சல், மெல்லிய நாற்றம் கண் விழிக்கும் முன்னரே புலன்களை வந்தடைந்திருந்தது. இறங்கி ரிக்ஷா பிடித்து குமார் மாமாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீடு நெருங்கவும் ரிக்ஷாவை நிறுத்தி இறங்கி கூலி கொடுத்து அனுப்பி விட, வீட்டுக்குள் உறவினர்கள் கூட்டம் இருந்தது.

சேலையை உதறி முந்தியைச் செருகி அம்மா தனைத் தயார் செய்து கொண்டார். அம்மாவின் பார்வை என் மேல் விழ பல் மெல்லக் கடிப்பட்டது. உள்ளிருந்து வார்த்தைகள் எனக்கு மட்டும் காதில் விழும் படியாய்,

"தலைல கட்டியிருக்கிற கர்சீப்பை அவுருடீ, ரௌடி மாதிரி இருக்கு"

உள்ளிருந்து மாமா வாசலுக்கு விரைந்து வர அவர் வருவதற்குள் அம்மா உதிர்த்த அவசர வார்த்தைகள். ஒரு கையால் தலையைக் கோதுவது போல் சடையைக் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தேன். கண் முன்னிருந்த வீட்டுக்குள் கவனம் இருந்தது. இது பெரியாச்சி வாழ்ந்த வீடாம். மன நிலை சரியில்லைன்னப் புறம்தான் மூடிய அந்தச் சின்ன வீட்டுக்குள் அடைத்திருக்கிறார்கள். ஆச்சி எப்படியெல்லாம் அந்த வாழ்க்கையை நேசித்திருப்பாள்? காலங்கள் போன பின்பும் குழையாதிருந்த பழமை சொன்னது.

செருப்பைக் கழற்றி உள்ளே நுழைந்தோம். திண்ணையிட்டவீடு. திண்ணை கம்பிகளால் மறைக்கப்பட்டு பச்சை நிற வர்ணம் அடித்திருந்தார்கள். இப்பொ இந்த வர்ணம் யாரும் அடிப்பார்களா? சந்தேகம்தான். வீடுகள் பூராவும் உறவுகள் சிரித்திருக்க அந்தக் காலத்து பூக்கள் தரை. அவர்களை விட அழகாய் சிரித்தது. பிரித்த உறவைச் சாக்கிட்டு இருக்கின்ற உறவுகள் சேர்ந்திருந்தன. நடுக்கூடத்தில் ஆச்சி படம் மாலையிட்டு விளக்கேற்றி படையல் வைக்கத் தயாராக என் மனதில் நின்று போன ஒடிசலான கன்னங்களோ வயோதிகத்தை எழுதிய தோலோ படத்தில் இல்லை கருப்பு வெள்ளையில், வெளிறிய நிறத்தில் ஜாக்கெட் சாம்பல் நிறத்தில் மடிப்பு வைத்துக் கட்டாத சேலை, பின்னணியில் பெரிய மாடங்களுடன் கூடிய கட்டடங்கள், வரைந்திருக்கிறார்கள் படத்தை என்று உணர்த்திய போதும், கண்கள். ஆம். நான் பார்த்த, பேசிய விழிகள் என்று எனக்குள் உணர்த்த

இப்போதும் அந்த விழி எனைப் பார்த்தது மூணு காசு நீட்டி மல்லிப் பூ கேட்குமோ? நினைவு உதறி எல்லாருக்குள்ளும் ஐக்கியமானேன். கூட்ட இரைச்சலில் இருந்தும் ஏதோ தனித்து நின்றிருப்பதாய் இருந்தேன். கூடம் தாண்டியிருந்தும் முற்றம். மேலே கம்பியிட்டு வெயில் உள்ளே வந்து கொண்டிருந்தது. பழைய வீடு புதிய நாகரீகத்திற்குள் புகுத்திக்கொண்டிருந்தது.

இருந்தும் பழமையின் வயோதிகம் எத்தனை மறைக்கப்பட்டிருந்தாலும், அழகான உணர்வோடு தெரிந்தும் கொண்டிருந்தது. சுவரெங்கும் ஆச்சியின் திருமண புகைப்படம், சந்ததிகளின் கல்யாணப் புகைப்பட வரிசைகள் வரிசையாக இருந்தது. எல்லாப் படங்களிலும் மனிதர்கள் புகைப்படங்களுக்கான சிரிப்பை ஏந்தியிருந்தார்கள்.

ஆச்சிக்கு ஏன் இப்படி ஆனது-?

எனக்குள் கேள்வி இன்னமும் எனக்குள். ஆச்சியோட பிள்ளைகள் எல்லாரும் தவறாமல் வந்திருந்தனர். குமார் மாமா எல்லாரையும் வரவேற்பதும், வேலைகளைத் தன் மகனுக்கு உத்திரவிடுவதுமாக இருந்தார். நடுக்கூடத்திலிருந்து படிக்கட்டுகள் மாடிக்குப் போனது. மாடி பலகடைப்பாக இருக்க, அந்த காலத்து வீடு தந்த ஆர்வம் மேலே தயக்கத்தோடு ஏறினேன். பலகடைப்புத் தாண்டி உள்ளே ஒரு மச்சு மிகச் சிறிய இருட்டான அறை. எதிர்த்திருந்த சன்னலிலிருந்து சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. கீற்றாய் விளக்குப் பொத்தானை நான் தேடித் தொட அறை வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

பழைய சாமான்கள் அறையெங்கும், மெத்தைகள் தலையணைகள், ஒரு பெரிய பித்தளை அண்டா, நிறமிழந்து கறுத்துப்போய் இருக்க அதனுள் சின்னச் சின்னச் சில பித்தளைச் சாமான்கள், இன்று உபயோகத்தில் காண முடியாத சாமான்கள் அவை, சுவருக்குள் பதிந்திருந்த சின்ன மர அலமாரி, மெல்லத்திறந்தேன். புத்தகங்கள்.

என்ன புத்தகங்கள்? வரிசையாகப் பார்க்க உள்ளே ஒரு சின்னக் குறிப்பேடு, சிட்டைப் புத்தகம் இருக்கத் திறந்து பார்த்தேன்.

நடுங்கும் விரல்களோடு யாரோ எழுதியிருந்தார்கள். தேதி 28.3.50 என்று இருக்க ஆர்வம் தொற்றிக் கொண்டது எனக்கு. காலை 200 மாலை 400 என்று பால்கணக்கு இருக்க,

ஆச்சி எழுத்தோ?

கேள்வி மனதுள் தொடர்ந்து திருப்ப அழிந்த சில எழுத்துக்களோடு சில வரிகள் வாசிக்கக் கிடைத்தன

"மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை
அழகு தங்க மாப்பிள்ளை"

அழிந்திருந்த சில வரிகள் தொடர்ந்து,

"யானை மேல ஏறச் சொன்னா
பானை மேல ஏறுவாரு

ஓடும் ஆத்தில குளிக்கச் சொன்னா
ஓணாணைத் தேடித் திரிவாரு"

பாடல் வரிகளில் தொடர்ந்கு நான் திருப்ப, நோட்டு முழுவதும் எழுத்தால் நிரப்பப்பட்டு இருந்தது. ஒரு வேளை என் கேள்விக்கு இதில் விடை இருக்குமோ? ஆரம்பப் பக்கத்தைத் தேடினேன்.

"என்னால இனி தாங்க முடியாது!"

என்று ஆரம்பமாயிருந்த முதல் வரியே நெஞ்சில் குறு குறுப்புத் தர மெல்ல வெளியே எட்டிப் பார்த்தேன். கீழே ஒரே சிரிப்பும் பேச்சும், அவசரங்களுமாய் இருக்க மீண்டும் அறைக்குள் ஒரு துணி மெத்தை மீது வெளிச்சம் நன்கு படும்படி அமர்ந்து கொண்டேன். வாசிக்கத் தொடங்கினேன்.

என்னால் இனி தாங்க முடியாது, மனசு கிடந்து தவிக்குது, யார் கிட்டேயும் இது பற்றி பகிர்ந்துக்கிட முடியாது. ரெண்டு நாளா ஒரே அழுத்தம் நெஞ்சுக்குள். ஒரு பிராண்டல், குளிர் காய்ச்சல் போல் அடிக்கடித் தூக்கிப் போட்டது உடம்பு. கோலத்தில் பிள்ளைகளிடம் சத்தமாகக் கத்தியிருக்கிறேன் தப்புன்னு தெரிஞ்சும். மனசுக்குள் ஒரே அல்லாட்டம்.

"திரும்பத் திரும்ப பழசை ஏன் நினைக்கிறேன்?"னு கேக்கிறாரு அவரு.

மறக்கக்கூடிய விசயமா அது மறக்க முடியலைங்கிறது எவ்வளவு கொடுமையான நிஜம். அவருகென்ன லேசா சொல்லிட்டுப் போயிடுறாரு பாதிக்கப்பட்டது நானில்ல.

எவ்வளவு முரண்பாடு?

தப்பு செய்த அவருக்கு ஒரு வித பாதிப்பும் இல்லை. ஒரு ஆணிண் தவறு எவ்வளவு பெரிய பாதிப்புகளை பெண்ணுக்குள் நிகழ்த்துகிறது. அந்த ஆணைச் சார்ந்து இருக்க நான் பழகியிருப்பதாலா? அவரின் தவறுகள் என்னை ஏன் பாதிக்கிறது. யோசனையில் கிறுகிறுக்கிறது. என்னிக்கும் போல் அன்னிக்கும் நான் ஏன் தூங்கியிருக்கக் கூடாதா? தூங்கியிருந்தா இந்த மன உழைச்சலுக்கு நான் ஆளாயிருக்க வேண்டாமில்ல. என்னைக்குமில்லாம அன்னைக்கு ஏன் முழிச்சிட்டு இருந்தேன். ஒரே வயிற்று வலி அன்று. வேறொரு சமயமா இருந்தா இந்த மாதிரி நேரங்களில் ஆழ்ந்து தூங்கி விடுவேன். கீழ் வீட்டில அத்தை மாமா தூங்கி ரொம்ப நேரமாச்சு. இன்னமும் அவர் வேலை முடிச்சு வரலை. வந்திடுவாருன்னு கொஞ்ச நேரம் படுக்கைல புரண்டு பார்க்கிறேன்.. தூங்கவும் முடியலை.

காத்திருப்பின் எரிச்சலும், வயிற்று வலியும் என்னை எழுப்பி விட எழுந்து கூடத்திற்குள் இறங்கும் படிக்கட்டில் வந்தமர்கின்றேன். கீழே போனா அத்தை எழுந்துகிடுவாங்க. பிறகு "துங்குமா! அவன் வந்திடுவான்னு" வற்புறுத்ததுவாங்க. அவங்களை எழுப்பி விட்டுடக்கூடாதுன்னு படிக்கட்டிலே அமர்கின்றேன். காத்திருக்கின்றேன்.

மணி 10.30. வலி தாங்காது முழங்காலில் தலை வைத்துப் படுத்தபடி, கால்களை இறுக்கிக் கொள்கிறேன் ஏதோ ஒரு சலனம் காதுகளில் விழ. என்ன சத்தம் யோசிக்கலானேன்.

சமையல் கட்டு இங்கிருந்து பார்க்க நன்கு தெரிந்தது. அதன் கதவில் என் கண்கண் நிலைத்துத் திரும்பியது. திரும்பி மேலே பார்த்தேன். குழந்தை ஆடாது கட்டிலுக்கு பக்கத்தில் இட்ட தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான். தொட்டில் அடியைப் பார்த்தேன். இன்னமும் நனைக்க வில்லை. பிறகு சத்தம் எங்கிருந்து? திரும்ப சமையல் அறைக் கதவில் என் கண்கள் தானாகவே போய் நிற்க, கதவு மெல்லத் திறந்து சத்தம் வராது சட்டென மூடியது.

நிஜமா? பிரமையா? யோசிக்கு முன் வெள்ளை நிறம் கதவு இடைவெளியில் இருந்து மெல்லத் தன்னை உள்ளிழுத்துக் கொண்டது. படபடவென்று நெஞ்சு அடிப்பது என் காதுகளுக்கு முரசோசையாகக் கேட்டது. கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. வேகமா எழுந்து ஓடிக் கதவைத் திறந்து, கை தானே விளைக்கப் போட, அவரும் வேலைக்காரியும், மூவரும் உறைந்து போய் நிற்க.

"தண்ணி கேட்டு வந்தேன்"

மெல்ல அவர் பேச்சை இழுக்க

"சரி மேலே போங்க"

என்னிடமிருந்து தெறித்து விழுந்த வார்த்தைகள் சடாரென வெளியேறி அவர் மேலே போயிருந்தார். வேலைக்காரியோ குனிந்த படி நின்றிருந்தாள்.

"நல்ல காரியம் செஞ்சிருக்கே" சொல்லி விட்டு, நானும் படியேறினேன்.

வேலைக்காரி காரணம் சொல்லாது நின்று விட்டிருந்தாள். இப்போ மூன்றாவது குழந்தை தொட்டிலில், மாமா போன வருடம் போயிட்டார். இன்னமும் அன்னைக்கு என்ன நடந்தது. ஏன் நடந்தது அவர் மனம் திறந்து பேசலை,

கேட்டு நான் செய்யப் போவதென்ன?

நானும் கேட்டுக்கலை. ரெண்டு நாள் நான் கொடுத்த தனிமை பொறுத்துக் கொள்ள முடியலையா? ஏன் ஏன்னு எனக்குள்ள ஆயிரம் கேள்விகள். வயது நாற்பதைத் தொடவும் உறவுகளில் இருந்த ஆர்வம் கொஞ்சம் குறைந்து போயிருந்தது. வயது காரணமா ஆர்வமில்லைன்னு தெரிஞ்சாலும் மனது கிடந்து கஷ்டப்படுது. ரெண்டு நாள் பொறுத்துக் கொள்ளாதவர்க்கு இப்போ எனைத் தொடர்ந்து உதாசீனப்படுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று.

எப்படிச் சொல்ல? எப்படிப் பேச?

எங்களுக்குள் உறைந்து போயிருக்கிற ஒரு கறுப்புப் பிரதேசம் சமீப காலமாக அழுத்தமா எங்க இரண்டு பேருக்கிடையில் அமர்ந்திருந்தது. உதாசீனங்களையும் தாங்க முடியாது. நெருக்கத்தையும் தவிர்க்க முடியாது. சமீப காலமா மனசு குழப்புது. தாங்காம எழுதுகிறேன்."

அதற்கு மேல் சில பக்கங்கள் காணாமல் போயிருந்தன.

எழுதவில்லையா? ஆச்சியே கிழிச்சிட்டாங்களா? தானா அழிஞ்சதா? இல்லை தாத்தா கிழித்திருப்பாரோ?

கீழே இருந்து குரல் கேட்டது சாமி கும்பிட வாங்கன்னு. எழுந்தேன். வேகமாக அந்த சிட்டைப் புத்தகம் என் முந்தானை மடிப்புக்குள் இழுத்து நான் செருக எனக்குள் புதைந்து கொண்டது.

லைட்டை நிறுத்தி வெளியேற மோதிக் கொண்டேன்.

குமார் மாமாவின் பையன். எனை விட ஒன்றிரண்டு வயது மூத்தவராக இருக்கலாம். மோதிய வேகத்தில் நிமிர்ந்தேன்.

"இருட்டுக்குள்ள என்னா செய்யுறீங்க?"

கேட்டபடி விளக்கைப் போட்டு பித்தளை அண்டாவில் இருந்து அரிவாளை எடுத்து,

"சாமி கும்பிடப் போறாங்க. வாங்க கீழே"

சொல்லியபடிக் கீழே இறங்க நானோ அந்த விழிதனில், நிலைத்திருந்தேன். விழி மல்லிப்பூ கேட்டுக் காசு நீட்டியது.

"ஊர் வந்திருச்சு எழுந்திடுமா."

அம்மா எழுப்பி விட பதறி அடித்து எழுந்தேன்.

முந்தானையை மட்டும் விட மனமில்லாது. அதற்குள் சிட்டைப் புத்தகம் இல்லை. ஒரு வேளை போகும் வீட்டில் அது கிடைக்குமோ?

மீண்டும் கேள்விகள்?
பதிலில்லா கேள்விகள்.
ரெண்டு விழிகள் மட்டும் சிரித்தது

கண் முன்னால் பதில்களாய்......

நன்றி: நனைந்தநதி

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link