காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது: கவர்னர் ஆர்.என்.ரவி!

‘காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது’ என சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த தீனதயாள் உபாத்யாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் பேராசிரியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த தீனதயாள் உபாத்யாயாவின் புத்தகங்களின் தமிழாக்க நூல்களான ‘சிந்தனை சிதறல்கள்’ மற்றும் ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ ஆகிய புத்தகங்களை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதாவது:-

இந்தியா சாதி, இனம் என பிளவுபட்டுள்ளது. கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் உள்ளோம். இதற்கெல்லாம் மேற்கத்திய கலாசாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவதே காரணம் ஆகும். பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கும் அதுவே காரணம். காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. இதனால், இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது.

நமது பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள். அது வேதனையாக உள்ளது. ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனத்தை அமெரிக்க நலனுக்காக ஆதரித்தார். பெண்களுக்கான ஓட்டு உரிமையை ஆபிரகாம் லிங்கன் வழங்க மறுத்தார். அவரை ஜனநாயகத்திற்கான உதாரணமாக காட்டுகிறோம். இது தவறான முன்னுதாரணம். காலனி ஆதிக்க மனநிலையை முதலில் புறந்தள்ளுங்கள். மொழி, இனம் ஆகியவற்றை வைத்து மக்களை பிரிக்க முடியாது. மக்கள் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். உலகின் பாதி நாடுகள் இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை பின்பற்றுகின்றன. இது இந்தியாவின் வளர்ச்சியையும் வலிமையையும் எடுத்துரைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.